புத்தளம் மாவட்டத்தில் தங்களுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தியது. அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸ் எங்கெல்லாம் கால்பதிக்கிறதோ அங்கெல்லாம் தங்களுடைய பட்டியலை போட்டுக்கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியாவதற்கு ஒருசிலர் முண்டியடிக்கின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியில் யார் சேர்ந்தாலும், சேராவிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துநின்று வெல்லக்கூடிய கட்சி என்பதை புத்தளம் மாவட்டத்தில் நிரூபிக்கவுள்ளது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை புத்தளம் மாவட்டத்தில் எருக்கலம்பிட்டி, நாகவில்லு பிரதேசத்தில் நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;
புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத்தளம் குறைந்துவிட்டது என்றதொரு மாயையை சிலர் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றனர். அதை பொய்யென நிரூபிப்பதற்காக எங்களது கோட்டையாக திகழும் அம்பாறை மாவட்டத்தை விட்டுவிட்டு, கட்சியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தை புத்தளம் மாவட்டத்தில் ஆரம்பித்துள்ளோம். அதுவும் புத்தளத்தில் வண்ணாத்திவில்லு பிரதேசசபைக்கு மாத்திரமே வேட்புமனு தாக்கல்செய்துள்ள நிலையில் இந்தக் கூட்டத்தை நடாத்திக்கொண்டிருக்கிறோம்.
மர்ஹூம் நூர்தீன் மசூர் காலத்தில் வன்னி மாவட்டத்தையும் தாண்டி பல மாவட்டங்களின் கட்சியின் ஆதரவுத்தளம் எந்தளவு உச்சக்கட்டத்தில் இருந்ததோ, அதேயளவுக்கு முஸ்லிம் காங்கிரஸை மீண்டும் இட்டுச்செல்வதற்கு நீங்கள் வழங்குகின்ற அனைத்து ஒத்துழைப்புக்கும் நன்றி. புத்தளம் மாவட்டத்தில் அபிவிருத்தி யுகத்தை ஆரம்பிப்பதற்கு, புத்தளம் பிரதேசசபையின் ஆட்சியை முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவின்றி யாரும் அமைக்க முடியாது. அதற்கான பயணத்தை நாங்கள் இப்போது ஆரம்பித்துள்ளோம்.
நேற்று முன்தினம்வரை முஸ்லிம் காங்கிரஸில் இருப்பதாக நடித்துக்கொண்டிருந்த அக்கரைப்பற்று மாநகரசபையின் ஒரேயொரு உறுப்பினர், மன்னாரிலிருந்து அம்பாறையில் கால்பதிக்கலாம் என்ற நப்பாசையில் வந்திருக்கும் தலைவருடன் சேர்ந்துகொண்டார். அவரை கட்டித்தழுவிய பின்னரே, தனது நியமனப் பத்திரத்தில் கைச்சாத்திடுவேன் என்று காத்துக்கொண்டிருந்தார். பின்னர் தான் வைத்திருந்த இரண்டு நியமனப் பத்திரங்களில் ஒன்றில் கைச்சாத்திட்டுவிட்டு, அவசரமாக அதை கையளித்தார். கடைசியில் அவர் கொடுத்தது கையொப்பமிடாத நியமனப்பத்திரம். புதிய தலைவரை கட்டிப்பிடிக்கப்போய் கடைசியில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.
அங்குள்ள முன்னாள் அமைச்சர் ஜனாதிபதியுடன் சேர்ந்துகொண்டு அக்கரைப்பற்று மாநகரசபையை கைப்பற்றுவதற்கு காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு வேட்பாளர்கள் இல்லாமல் தனது இரண்டு புதல்வர்களையும் தேர்தலில் களமிறக்கியுள்ளார். வாரிசுரிமை அரசியலில் அந்தக் கட்சி செல்வதனால் மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். இந்த நிலையில் முஸ் லிம் காங்கிரஸ் அக்கரைப்பற்றில் பல மான அணியை நிறுத்தியிருக்கிறது. இதன் மூலம் அக்கரைப்பற்று பிரதேச சபையின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் எந்தவிதமான சந்தேகங்களும் கிடையாது. அத்துடன் மாநகரசபையின் ஆட்சியையும் கைப்பற்றுவதற்கான பெரிய முயற்சியில் நாங்கள் இறங்கியிருக்கிறோம்.