உள்ளூராட்சித் தேர்தலில் தொகுதி உடன்பாடு காணப்பட்ட இடங்களில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்தும் ஏனைய பகுதிகளில் தனித்தும் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி கண்டி, மாத்தளை மாவட்டங்களில் முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.
மாத்தளை மாநகர சபைக்கும் கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரசபைக்கும் ஏணிச்சின்னத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிடுகின்றது. இதற்கான வேட்புமனுக்கள் நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச்சின்னத்திலேயே முன்னணி தனித்து போட்டியிடுகின்றது. இதற்கேற்றவகையிலேயே மாத்தளை மாநகரசபைக்கும் நாவலப்பிட்டி நகரசபைக்கும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதேபோன்றே கண்டி மாநகரசபை பன்வில, உடப்பலாத்த, மஹியங்கனை ஆகிய சபைகளுக்கும் ஏணிச்சின்னத்திலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி போட்டியிட உள்ளது.
இதேவேளை கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுக்கள் நடத்தப்பட்ட போதிலும் தொகுதிப்பங்கீட்டு விடயத்தில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை. இதனால் தனித்துவத்தை பேணும்வகையில் கொழும்பு மாநகரசபையில் ஏணிச்சின்னத்தில் களமிறங்குவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த மாநகரசபை தேர்தலின்போது ஜனநாயக மக்கள் முன்னணி தனித்து ஏணிச்சின்னத்தில் போட்டியிட்டு ஆறு உறுப்பினர்களைப் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.