காணாமல் போனோர் தொடர் பில் ஆராய்வதற்கான அலுவல கம் உடனடியாக தொழிற்பாட்டுக்கு வரவேண்டும். இதனை அரசாங்கம் விரைந்து உறுதிப்படுத்த வேண்டும். காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகத்தை செயற்படுத்தும் செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர், சிவில், சமூக அமைப்பினர் இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்று இலங்கைக்கு விஜயம் செய்த தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங் கம் உடனடியாக நீக்கவேண்டும். தாமதமின்றி அந்த சட்டத்தை அகற்றிவிடுமாறு அரசாங்கத்தை கோருகின் றோம். அத்துடன் அதற்கு பதிலாக தயாரிக்கப்படும் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமானது சர்வதேச தரங்களுக்கு அமைவாக இருக்கவேண்டும். பொலிஸ் நிலையங்களில் சட்டத்தரணியின் பிரசன்னம் இன்றி தடுத்துவைக்கப்பட்டோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் விடயம் பற்றி கவலைப்படுகிறோம் என்றும் ஐ.நா. செயற்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள ஜெனிவா பிரேரணையின் பிரகாரம் விசேட பொறுப்பு கூறல் பொறிமுறையை முன்வைக்குமாறு
அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம் என்றும் ஐ.நா. செயற்குழுவின் பிரதிநிதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராயும் ஐக்கிய நாடுகளின் செயற்குழு உறுப்பினர்களான ஹோஸே அன்ரோனியோ, எலினா ஸ்டீனட், லீ டொமே, ஸிட்டோன்ஜி ரோலன்ட் ஆகியோர் தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும்முன் நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து தமது மதிப்பீடுகளை வெ ளியிட்டபோதே இவற்றைக் குறிப்பிட்டனர்.
இதன்போது அவர்கள் தமது முதற்கட்ட மதிப்பீட்டு அறிக்கையையும் வெளியிட்டதுடன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர். செய்தியாளர் சந்திப்பில் ஐ.நா. பிரதிநிதிகள் தொடர்ந்து தகவல் தெரிவிக்கையில்,
எமது இலங்கை விஜயத்தின் போது நாங்கள் தடுப்பு முகாம்கள், பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், விளக்கமறியல் சிறைச்சாலைகள் உள்ளிட்ட 30 இடங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தோம்.
அத்துடன் அரசாங்கத்தின் அமைச்சர்கள், பொலிஸ் மற்றும் உயர்மட்ட விசாரணை பிரிவுகளின் அதிகாரிகள், முப்படைகளின் தளபதிகள், உளவுப்பிரிவு பிரதானிகள், குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம், பிரதம நீதியரசர், சட்டமா அதிபர், நீதித்துறை முக்கியஸ்தர்கள், சட்டத்தரணிகள் சங்கத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். தடுத்துவைக்கப்பட்டுள்ள சுமார் நூறுபேரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.
இலங்கை தற்போது ஐக்கிய நாடுகள் சபையுடனும், சர்வதேச சமூகத்துடனும் இணைந்து செயற்படுகின்றமை தொடர்பில் எமது செயற்குழு பாராட்டுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நாம் அவதானத்தில் கொள்கிறோம். பலவந்தமாக காணாமல்போதல், தன்னிச்சையாக தடுத்து வைத்தல் போன்ற விடயங்களை ஆராய்தல் தொடர்பாக விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அண்மையில் உருவாக்கப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் உடனடியாக தொழிற்பாட்டுக்கு வரவேண்டும். இதனை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும். இந்த செயற்பாட்டில் பாதிக்கப்பட்டோர், சிவில் சமூக அமைப்புக்கள் இடம்பெறவேண்டும். அதுமட்டுமன்றி உண்மையை கண்டறியும் ஆணைக்குழு ஒன்றையும் நட்டஈடு வழங்கும் நிகழ்ச்சிதிட்டம் ஒன்றையும் உடனடியாக ஸ்தாபிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
அத்துடன் ஜெனிவா பிரேரணையின் பிரகாரம் பொறுப்பு கூறல் பொறிமுறையை முன்வைக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். கடந்தகால மீறல்களை ஆராயாமல் தன்னிச்சையாக தடுத்துவைத்தல் தொடர்பாக ஆராய முற்படுவது அவற்றை குறைத்து மதிப்பிடுவதாக அமையும்.
இலங்கை தற்போது அமைதி நிலைக்கு திரும்பியுள்ளது. எனவே தற்போது சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படவேண்டும். சுதந்திரத்தை தடுக்கும் எந்த செயற்பாடுகளும் இடம்பெறக்கூடாது. எனினும் எமது செயற்குழுவானது சுதந்திரத்திற்கான உரிமைக்கு மதிப்பளிக்காத தன்மையை காண்கின்றது. குறிப்பாக சட்டத்தை நடைமுறைப்படுத்துவோர் நீதித் துறையினர் மற்றும் ஏனைய அதிகார சபைகள் தனிநபர் சுதந்திரத்திற்கான உரிமைகளுக்கு இன்னும் மதிப்பளிக்கவில்லை.
தனிநபர்களின் சுதந்திரத்தை இழக்க செய்யும் தற்போதைய அதிகாரங்கள் பரந்துபட்ட நிறுவனங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளன. அதாவது பொலிஸ் நிலையங்கள், சிறைச்சாலைகள், இளம் வயதினருக்கான இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனநல சுகாரதார நிலையங்கள், முன்னாள் போராளுகளுக்கும், போதைவஸ்துக்களுக்கு அடிமையானோருக்கும் நலிவுறும் சூழ்நிலையில் வாழ்வோருக்கும் உரிய புனர்வாழ்வு நிலையங்கள் இவற்றுள் அடங்கும்.
மிக அதிகளவாக விளக்கமறியல் சிறைகளை பயன்படுத்துதல். காலம்கடந்த சட்டமுறைமைகள், சித்திரவதைகள், வலுக்கட்டாயமாக பெறும் குற்றஒப்புதல் வாக்குமூலங்களில் தங்கியிருத்தல், தடுத்து வைப்பதற்கான செயற்திறன் குறைந்த மாற்றுவழிகள் என்பன உடனடியாக மறுசீரமைக்கு உட்படுத்தப்படவேண்டும்.
1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்குமாறு அரசாங்கத்தை கோருகின்றோம். இந்த சட்டம் நான்கு தசாப்தங்களாக தன்னிச்சையாக தடுத்துவைப்பதற்கு முக்கிய காரணியாக அமைந்துள்ளது. தடுத்து வைக்கப்பட்டோர் குறிப்பாக கைதுசெய்யப்படும் தருணத்திலிருந்து அவர்களின் தொடக்க வாக்குமூலத்தை பதிவுசெய்தவற்கு முன்னர் சட்ட உதவி பெறும்வகையிலான உரிமைகளை அனுபவிப்பதில்லை.
விசேடமாக பொலிஸ் நிலையங்களில் சட்டத்தரணி பிரசன்னமின்றி தடுத்துவைக்கப்பட்டோரை அதிகாரிகள் விசாரணை செய்யும் விடயம் தொடர்பில் கவலைப்படுகிறோம். தற்போதைய நிலையில் இலங்கை சிறைச்சாலைகளில் 20598 பேர் உள்ளனர். இவர்களில் 11009 பேர் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். அதாவது அரைவாசிக்கும் மேற்பட்டோர் விசாரணைக்கா காத்திருக்கின்றனர்.
இலங்கையில் விசாரணைக்காக காத்திருப்பவர்கள் தடுத்துவைக்கப்படுவது மூன்று முதல் நான்கு வருட காலத்தை கொண்டிருப்பதாக அமைந்திருக்கின்றது. எனினும் இறுதி தீர்ப்பு வழங்கும்போது இந்த விசாரணை காலத்தில் தடுத்துவைக்கப்பட்ட காலப்பகுதி கவனத்தில் கொள்ளப்படுவதில்லை. சிலர் விசாரணைக்காக நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டு பின்னர் எந்தவிதமான குற்றச்சாட்டுமின்றி விடுதலைசெய்யப்படுகின்றனர். எந்தவிதமான நட்டஈடும் அவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.
அரசாங்கம் பிணை வழங்கும் செயற்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். விசாரணைகளை துரிதப்படுத்தவேண்டும். நீதிமன்ற செயற்பாடுகளையும் துரிதப்படுத்த வேண்டும். இறுதி தீர்ப்பு வழங்கும்போது விசாரணை காலத்தில் தடுத்து வைக்கப்பட்ட காலப்பகுதி கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.
பொலிஸ் நிலையங்கள், குற்றப்புலனாய்வுப் பிரிவு, பயங்ரகாரவாத தடுப்புப்பிரிவு ஆகியவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களிடம் குற்ற ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறுதற்காக சித்திரைவதைகள் மேற்கொள்வதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எந்தவொரு குற்றஒப்புதல் வாக்குமூலமும் நீதிபதி முன்பாகவே வழங்கப்படவேண்டும். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் சட்ட ரீதியாக அதனை சவாலுக்கு உட்படுத்துவது உறுதிப்படுத்தப்படவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான சாசனத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு ஐ.நா. செயற்குழு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றது. தற்போதைய நிலைமையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் 69பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 59 பேர் தமிழர்கள். மேலும் 17பேர் இன்னும் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
அண்மையில் வவுனியாவில் இருந்த ஒரு வழக்கை அனுராதபுரத்திற்கு மாற்றியுள்ளனர். ஆனால் அங்கு ஒரு தமிழ் மொழிப்பெயர்பாளர் மட்டுமே இருக்கின்றார். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக ஆராயவேண்டும். கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தற்போதைய நிலைமையில் எந்தவொரு தமிழ் பேசும் நீதியரசர்களும் இல்லை என எமது குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதுதொடர்பில் நீதியானமுறையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கேள்வி:- நீங்கள் ஜோசப் முகாமுக்கு விஜயம் செய்தீர்களா? அங்கு நிலைமை எப்படி உள்ளது?
பதில்:- ஆம் நாம் விஜயம் செய்தோம். அந்த இராணுவ தளத்திற்கும் நாம் விஜயம் செய்தோம். அந்த வளாகத்தின் அனைத்து பகுதிகளையும் பார்ப்பதற்கு நாம் அனுமதிக்கப்பட்டோம். நாம் சில கூடங்களுக்கும் விஜயம்செய்தோம். எனினும் அங்கு எதுவும் அசாதாரணமாக இருப்பதை நாம் அவதானிக்கவில்லை.