திருச்செந்தூர் கோவிலில் அறநிலையத்துறை என்ஜினீயர்கள் ஆய்வு

309 0

திருச்செந்தூர் கோவிலில் இடிந்து விழுந்த கிரிப்பிரகார மண்டப பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை என்ஜினீயர்கள் ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டப மேற்கூரையின் ஒரு பகுதி நேற்று முன்தினம் காலையில் திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிய திருச்செந்தூரை சேர்ந்த பேச்சியம்மாள் (வயது 43) உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மதுரை நிர்வாக என்ஜினீயர் வெண்ணிலா (கட்டுமானம்) தலைமையில், நெல்லை மண்டல இளநிலை என்ஜினீயர்கள் திருநாகலிங்கம், நெல்லைகுமார், திருச்செந்தூர் கோவில் இளநிலை என்ஜினீயர் சந்தானகிருஷ்ணன் ஆகியோர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கிரிப்பிரகார மண்டபம் முழுவதையும் ஆய்வு செய்தனர்.

இடிந்து விழுந்த கட்டிட இடிபாடுகளில் கம்பிகளின் தன்மை, தூண்களின் எடை, தூண்களின் இடைவெளி, ஆழம், அதன் தாங்கும் திறன் குறித்தும் ஆய்வு செய்தனர். கிரிப்பிரகார மண்டபத்தில் பக்தர்கள் செல்லாதவாறு இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Leave a comment