கடலூர் மாவட்டத்தில் ஆய்வு பணியின்போது கழிவறையை பார்வையிட்ட சம்பவத்தில் என்ன நடந்தது என்பது பற்றி கவர்னர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
கவர்னரின் மாளிகையான ராஜ்பவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடலூர் மாவட்டத்தில் கவர்னருடன் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் அதிகாரிகள் இணைந்து, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டப்படும் இடத்தை பார்வையிட்டதை கெட்ட நோக்கத்துடன் கேலி செய்யும் விதத்தில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் கழிவறை, கவுரி என்ற பெண்ணின் வீட்டில் கட்டப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்கு மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட வருவாய் பெண் அதிகாரியின் (டி.ஆர்.ஓ.) பின்னால் கவர்னர் சென்றார். அவர்கள்தான் அங்கு கவர்னர் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
கட்டப்பட்ட அந்த கழிவறை காலியாக இருப்பதை உறுதி செய்த பிறகு, பெண் டி.ஆர்.ஓ.வின் பின்னால் கலெக்டரும், அவர் பின்னால் கவர்னரும் அந்த கழிவறைக்கு சென்றனர்.
இதுபற்றி சில தனியார் டி.வி.களில் வந்த தகவல்கள் தவறானவை என்பது மட்டுமல்ல விஷமத்தனமானதாகும். கெட்ட நோக்கத்துடன் கேலி செய்யும் விதத்தில் அப்படி தகவல்கள் ஒளிபரப்பப்படுகின்றன.
இனிமேல் எதிர்காலத்தில் ராஜ்பவன் தொடர்பான எந்த செய்தி என்றாலும் அதை சரிபார்த்த பிறகே வெளியிட வேண்டும். இதுபோல் பொறுப்பற்ற தன்மையில் செய்திகளை வெளியிட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.