சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடராஜன், பாஸ்கரன் உள்ளிட்ட நால்வருக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் கடந்த 1994-ம் ஆண்டு புதிய லெக்சஸ் எனப்படும் வெளிநாட்டு சொகுசு காரை பயன்படுத்திய கார் என கூறி குறைந்த விலைக்கு இறக்குமதி செய்துள்ளார். சொகுசு கார் இறக்குமதி செய்ததில் அரசுக்கு ரூ 1.62 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவர் மீது சி.பி.ஐ. சார்பில் மோசடி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் பொருளாதார சிறப்பு நீதிமன்றம் கடந்த 2010-ம் ஆண்டு நடராஜன் உட்பட 4 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த மாதம் 17-ம் தேதி விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நடராஜன் உட்பட நான்கு பேருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.
உடல்நலக்குறைவால் உடனே சரணடைவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என நடராஜன் மற்றும் பாஸ்கரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்கள் கோரிக்கை அங்கு நிராகரிக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டை நாடினர்.
இந்த மனுவை கடந்த 4-ம் தேதி விசாரித்த நீதிபதி தீபக் குப்தா, நடராஜன் மற்றும் பாஸ்கரன் சரணடைவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவிட்டார். இந்த மனு மீதான விரிவான விசாரணையை வேறு தேதிக்கு ஒத்தி வைத்தும் அவர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து, நடராஜன் மற்றும் பாஸ்கரனுக்கு கடந்த 7-ம் தேதி பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சி.பி.ஐ கோர்ட் உத்தரவிட்டது. சரணடைய விலக்கு அளித்து சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின் நகலை நடராஜன், இன்னும் சமர்பிக்காததால் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் ஜாமீன் கோரி குற்றவாளிகள் 4 பேரின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் 25 லட்சம் ரூபாய்க்கு பிணைத்தொகை செலுத்தி, கோர்ட்டில் சரணடைந்து பின்னர் ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.