குல்பூஷன் ஜாதவுக்கு தூதரக உதவி மறுப்பு

254 0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவை இந்திய தூதர் சந்திப்பதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்து உள்ளது, இந்தியாவின் நகர்வு உளவாளியிடம் இருந்து தகவல் பெறும் முயற்சியாகும் என குற்றம் சாட்டிஉள்ளது.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் குல்பூஷண் ஜாதவ். இவர் தங்கள் நாட்டில் உளவு பார்த்ததாக கூறி பாகிஸ்தான் ராணுவ கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. குல்பூஷண் ஜாதவுக்கு தூதரக உதவி மறுக்கப்பட்ட நிலையில், இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடி தற்காலிக தடையை பெற்றது. இவ்விவகாரம் தொடர்பாக நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது.
பாகிஸ்தான் சிறையில் வாடும் குல்பூஷன் ஜாதவை சந்திக்க அவரது மனைவி மற்றும் தாயாருக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் நிலையில் பாகிஸ்தான் குல்பூஷன் ஜாதவின் தாயார் மற்றும் மனைவி அவரை சந்திக்க அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக விசா வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என இந்தியா கூறி உள்ளது.  இருப்பினும் குல்பூஷன் ஜாதவை பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் சந்திப்பதற்காக இந்திய அரசு விடுத்துவரும் கோரிக்கையை பாகிஸ்தான் தொடர்ச்சியாக மறுத்து வருகிறது.
இப்போது சர்வதேச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், குல்பூஷன் ஜாதவை இந்திய தூதர் சந்திப்பதற்கு மறுப்பு தெரிவித்து உள்ளது. மேலும், இந்தியாவின் நகர்வு உளவாளியிடம் இருந்து தகவல் பெறும் முயற்சியாகும் என குற்றம் சாட்டி உள்ளது.
பாகிஸ்தான் தூதரக அணுகுமுறை என்பதில் வியன்னா ஒப்பந்த சாசனத்தை மீறுகிறது என இந்தியா ஏற்கனவே குற்றம் சாட்டியது. இப்போது பாகிஸ்தான் சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள பதில் மனுவில், வியன்னா ஒப்பந்த சாசனத்தை பாகிஸ்தான் மீறவில்லை, சாசனம் நியாயமான பார்வையாளருக்கு மட்டுமே, உளவாளிகளுக்கு கிடையாது என கூறி உள்ளது என எக்ஸ்பிரஸ் டிரிபியூன் செய்தி வெளியிட்டு உள்ளது.
தற்போதுள்ள ஆவணங்களின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்குவதா? அல்லது கூடுதலாக ஆவணங்களை தாக்கல் செய்யும்படி இரு நாடுகளிடமும் கேட்பதா? என்பதை சர்வதேச நீதிமன்றம் விரைவில் முடிவு செய்ய உள்ளது.

Leave a comment