மியான்மரில் சர்வதேச ஊடக நிறுவனத்தின் பத்திரிக்கையாளர்கள் இருவர் கைது

277 0

மியான்மரில் சர்வதேச ஊடக நிறுவனமான ராய்டர்ஸில் பணியாற்றும் ஒரு பத்திரிகையாளர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

மியான்மரின் ராக்கீன் மாகாணத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ராணுவத்தின் அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால், சர்வதேச ஊடகங்கள் மியான்மரில் இருந்து தொடர்ந்து செய்தி சேகரித்து வருகின்றன. இந்நிலையில், ராய்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் இரு பத்திரிக்கையாளர்கள் இருவர் யாங்கூனில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாங்கூனில் இருந்து செய்தி சேகரித்து வரும் வா லோன் மற்றும் யாவ் சோய் ஊ என்ற இரு பத்திரிக்கையாளர்களும் நேற்று முன்தினம் மாயமாகினர். அவர்களை தொடர்பு கொள்ள முடியாததால் அங்குள்ள காவல் நிலையத்தில் அந்நிறுவனம் புகாரளித்துள்ளது. ஆனால், நேற்று மாலை வரை அவர்கள் பற்றி தகவல் இல்லை என்று போலீசார் பதிலளித்துள்ளனர்.

இதனையடுத்து, சட்ட விதிமுறைகளை மீறி செய்தி சேகரித்து அதை வெளிநாட்டுக்கு அனுப்பியதாக வா லோன் மற்றும் யாவ் சோய் ஊ ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு உதவியாக இருந்த ஒரு காவலரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு நேற்றிரவு தெரிவித்தது.

பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர், சர்வதேச சட்ட திட்டங்கள் படி பத்திரிக்கையாளர்களை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.

பத்திரிகையாளர்கள் கைதுக்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும், கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள பிரிவுக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment