மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க. மீனவர் அணி சார்பில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “தமிழக அரசின் மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கும் திட்டத்தில் ஊழல் நடைபெற்றிருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும் வகையில் அரசின் சார்பில் 20 ஆயிரம் வாக்கி-டாக்கிகள் வாங்கப்பட்டும் பரிந்துரைக்கப்பட்ட 17 இடங்களில் டவர்கள் கட்டப்படாததால் அவை மீனவர்களுக்கு வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன” என்று குற்றம் சாட்டினார்.
இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
மீனவர்களுக்கு வாக்கி டாக்கி வாங்கியதில் முறைகேடு நடக்கவில்லை. 13 மாவட்டங்களில் மீனவர்கள் வசதிக்காக ரூ.68 கோடியில் வாக்கி டாக்கி டவர் மார்ச் மாதம் அமைக்கப்படும்.
ஒக்கி புயலில் சிக்கி காணாமல் போன மீனவர்களில் நேற்று மட்டும் 35 பேர் கரை திரும்பி உள்ளனர்.
வி.ஏ.ஓ. தேர்வுக்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.