பலம் மிக்கவர்களாக பெண்கள் மாறுவதன் மூலமே பெண்கள் எதிர்நோக்கிவரும் பிரச்சினைகளை வெற்றிகொள்ள முடியும் என்று, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும்போது வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் வவுனியா செட்டிக்குளம் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 34 பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கு 16 லட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியிலான வாழ்வாதார உதவித்திட்டங்களை மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் 08.12.2017 அன்று வழங்கிவைத்து உரையாற்றுகையில்…
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், பெயரளவிற்கு மாகாண சபையை நிறுவியுள்ள மத்திய அரசானது தனது தேசிய கட்டமைப்புக்களினூடாக திட்டங்களை நடைமுறைப்படுத்த எத்தனித்து வருகின்றமையானது அதனை திட்டமிட்டு முடக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.
மகளிர் விவகாரம், புனர்வாழ்வு ஆகிய அமைச்சின் செயற்பாடுகளை வடமாகாணத்திற்கூடாக மேற்கொள்வதற்கு வசதியாக தனித்தான அலகொன்றை ஏற்படுத்தித்தருமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். அவ்வாறு தனி அலகொன்று உருவாக்கப்பட்டால்தான் இவ்விடயங்கள் தொடர்பான செயற்பாடுகளை ஒருமுகப்படுத்தி கையாள முடியும்.
அத்துடன் அதற்கென தனித்தான ஆளணியொன்றையும் அமைப்பதன் மூலமே பாதிக்கப்பட்டவர்களை நேரடியாகச் சந்தித்து உண்மை நிலைகளை அறிந்து திட்டங்களை சரியான முறையில் வகுத்து நடைமுறைப்படுத்த முடியும். அவ்வாறான ஆளணி இன்மையால் ஏற்கனவே ஏதோவொரு வகையில் சில உதவிகளைப் பெற்றவர்களுக்கே திரும்பவும் உதவிகளை கொடுக்கும் நிலை ஏற்படுகிறது.
போரினால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்திற்குட்பட்ட பெண்களை தலைவர்களாகக் கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவததென்பது பாரிய சவாலான விடயமாக உள்ளது. அதற்கு முதல் காரணம் மத்திய அரசு போதுமான நிதியை வழங்காமையே ஆகும்.
கிடைக்கின்ற நிதியைக் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்படும் சில உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் இவ்வாறான உதவித்திட்டங்களை வட மாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் மேற்கொண்டு வருகின்றோம். பெண் தலைமைத்துவ குடும்பங்கள் ஒன்று சேர்ந்து தொழில் முயற்சிகளை மேற்கொள்ளவதற்கு முன்வர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றேன்.
தொடர்ந்தும் தனித்தனியே, நாம் தருகின்ற சொற்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் மூலம் நிலையான வாழ்வாதாரத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஆகவே, கூட்டு முயற்சியாக தொழில் முயற்சிகளை மேற்கொள்ள நீங்கள் முன்வந்தால் அதற்கு ஏற்ற உதவிகளை பரிசீலனைசெய்து முன்னுரிமை அடிப்படையில் செய்ய தயாராக உள்ளோம்.
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் எமது பெண்களை பலவீனமான நிலைக்கு இட்டுச்சென்றுள்ளது. புலிகளின் காலத்தில் பலமாக இருந்த பெண்களை இன்று எளிதாக ஏமாற்றிவிடலாம் என்ற நிலையை இந்த யுத்தம் ஏற்படுத்தியுள்ளது. இவ் அவலநிலையை வடக்கு கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் வறுமைநிலையே அதற்கு முதற்காரணமாகும்.
குடும்ப பாரத்தை சுமக்கும் பெண்களை கடந்து அவர்களது பிள்ளைகளே குறிப்பாக வளர்ந்த பெண் பிள்ளைகளே பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக இருக்கின்றார்கள். அவ்வாறான நிலையில் நீதி கேட்க முற்படுகையில் பெரும்பாலும் நீதி மறுக்கப்படும் நிலையே காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி நீதி கேட்கும் பெண்களின் சுயமரியாதையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் நடத்தப்படுகின்றமை கொடுமையாகும்.
எமது மண்ணின் இன்றைய யதார்த்த நிலை இதுதான். இதனை போக்குவதன் மூலமே இந்த அவல நிலையை வெற்றிகொள்ள முடியும். பெண்கள் மிகவும் பலமானவர்களாக இந்த சமூகத்தில் உருவாக வேண்டும். பெண் தலைமைத்துவ குடும்பங்கள் சுயமாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஊக்கமும், சுயகௌரவத்துடன் வாழவேண்டும் என்ற வைராக்கியமும் கொண்டவர்களாக மாறுவதன் மூலமே இதனை சாத்தியமாக்க முடியும் என்று அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்திருந்தார்.
அழகிய குடும்பம் வேலைத்திட்டத்தின் கீழ் செட்டிக்குளம் மெனிக் பாம் பகுதியைச் சேர்ந்த மோ.பரிமளம், த.ஈஸ்வரி, ச.தேவி, இ.சறோஜா, இ.விஜயகுமாரி, ச.நாகேஸ்வரி, க.கவிதா, ச.நூர்னிஷா, எ.சித்தியிஸ்ஷா, எஸ்.கஸ்மத்துல்கசினா, எப்.ரசிதியா, ஆர்.நயிபர், கே.கலைமதி மற்றும் பு.கஜேந்தினி ஆகிய 14 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு தையல் தொழில் செய்வதற்கு தேவையான தையல் இயந்திரம் உள்ளிட்ட உபரணங்கள் வழங்க்பட்டது.
இவ்வாறு சு.பாக்கியம், இ.தெய்வானை, சூ.மக்ரெட், இ.முத்துலட்சுமி, த.சந்திரலேகா, இ.குளோரியா, சா.ரதனி, க.சிவகலா, மேரி குன்சலா, வெ.இராஜேஸ்வரி, இ.இந்துராணி, இ.விஜயராணி, இ.மனோன்மணி, யோ.செல்வராணி, எஸ்.எம்.ரூபியா மற்றும் யோ.சுபாசினி ஆகிய 16 பெண் தலைமைத்துவ குடும்பங்களிற்கு விவசாயம் செய்வதற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இ.கனகவல்லி, சி.மங்கலேஸ்வரி, ப.நாகேஸ்வரி மற்றும் கு.இராஜேஸ்வரி ஆகிய நான்கு பெண்தலைமைத்துவ குடும்பங்களிற்கு சிறு வியாபாரம் மேற்கொள்வதற்கு தேவையான உபகரணங்களும் அமைச்சரால் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.