யானைக் குட்டியொன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய, உடுவே தம்மாலோக்க தேரருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (12) அனுமதி வழங்கியது.
பௌத்த பிரசங்கம் நிகழ்த்துவதற்காக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்றில் அவர் அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த மனு, நேற்று (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது,
கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் சம்பத் விஜேரத்ன அனுமதியளித்து உத்தரவிட்டார். உலகின் பல நாடுகளின் பௌத்த தலைவர்கள் விடுத்த அழைப்பின் பேரில் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி வரை வெ ளிநாடு சென்று வருவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உடுவே தம்மாலோக்க தேரர் அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு தர்ம போதனை நிகழ்த்துவதற்காகச் செல்லவுள்ளார். பொது சொத்தான யானைக் குட்டியை அனுமதிப்பத்திரமின்றி வைத்திருந்ததாக சட்டமா அதிபரிபரினால் உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் 19 சாட்சியாளர்கள் மற்றும் மூன்று ஆவணங்களை எதிர்பார்த்திருப்பதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.