அமைச்சரின் கருத்துத் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு விசாரிக்க வேண்டும்

279 0

அமைச்சர் ஜோன் அமரதுங்கவால் வெளியிடப்பட்ட கருத்துகள் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் உடனடியாக விசாரணை செய்ய வேண்டுமென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்   ஜனக பண்டார தென்னக்கோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்றுக் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

“அரசாங்கமும் பொலிஸும் தங்கள் பக்கம் இருப்பதாகவும், அதனால் எதிர்வரும் தேர்தலில் அச்சமின்றி வாக்களிக்குமாறும், மக்களை அவர் கோரியுள்ளார். அத்தோடு, தேங்காய், அரிசி, மரக்கறிகள் ஆகியவற்றை, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது தொடர்பாகவும் கூறியுள்ளார். இது, மக்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட எச்சரிக்கை ஆகும்” என்று குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளால் முன்வைக்கப்படும் இவ்வாறான கருத்துகள், மக்களின் மனநிலைகளைக் குழப்புவதற்கான முயற்சி எனத் தெரிவித்த அவர், மரக்கறிகளை இறக்குமதி செய்வது தொடர்பான கருத்து, தம்புள்ளை பொருளாதார நிலையத்துக்கான அவமானப்படுத்தல் என்றும் குறிப்பிட்டார்.

இவ்வாறான அரசியல்வாதிகளுக்கு, எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மக்கள் தகுந்த பதில்களை வழங்க வேண்டுமெனவும், அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

Leave a comment