இன்றைய அமைச்சரவை சந்திப்பில், தமது சம்பளப் பிரச்சினை குறித்து சிறந்த தீர்மானம் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ரயில்வே தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறும் வரை, தொடர்ந்தும் வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படும் என, ரயில் சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்ட 7 தொழிற் சங்கங்கள் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளதாக, ரயில்வே முகாமையாளர் தெரியப்படுத்தியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது.
அத்துடன், கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இன்று 40 ரயில் சேவைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுத்ததாக, அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, பொல்கஹவலையில் இருந்து கோட்டைக்கு 3 ரயில் சேவைகளும், அளுத்கமவில் இருந்து இரண்டு சேவைகளும், குறுந்தூர சேவைகளாக ராகம முதல் கோட்டை வரை, பாணதுறை முதல் கோட்டை வரையிலும் ரயில் சேவைகள் இடம்பெற்றதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுஇவ்வாறு இருக்க ரயில்வே ஊழியர்கள் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு நாளாந்தம் 12 – 14 மில்லியன் ரூபா வரை நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே வர்த்தக அதிகாரி என்.இதிபொலகே கூறியுள்ளார்.