நாட்டின் தொழில் முயற்சியாளர்களை பாராட்டி கௌரவிக்கும் நோக்குடன் இலங்கை வர்த்தக சங்கமும் கைத்தொழில் சபையும் இணைந்து வருடாந்தம் ஏற்பாடு செய்துவரும் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர் விருது விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (11) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
22 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விருது விழாவில் ஆண்டின் சிறந்த தொழில் முயற்சியாளர், ஆண்டின் சிறந்த பெண் தொழில் முயற்சியாளர், ஆண்டின் சிறந்த இளம் தொழில் முயற்சியாளர், ஆண்டின் சிறந்த இயலுமைகளைக்கொண்ட தொழில் முயற்சியாளர் ஆகியோருக்கான விருதுகள் வழங்கப்பட்டன.
இதில் விவசாய விற்பனை சேவை, கைத்தொழில் மற்றும் வர்த்தகம் ஆகிய துறைகளுடன் தொடர்புடைய விருதுகள் வழங்கப்பட்டதுடன், இதன் பிரதான விருதான பிளட்டினம் விருது ஜெட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் ஈலியன் குணவர்தனவுக்கு ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
இரண்டாவது விருது டி.எஸ்.ஐ வியாபார குழுமத்திற்கு வழங்கப்பட்டதுடன், அதன் முகாமைத்துவ பணிப்பாளர் குலதுங்க ராஜபக்ஷ ஜனாதிபதியிடமிருந்து விருதைப் பெற்றுக்கொண்டார்.
அமைச்சர்களான ரிசாத் பதியுதீன், தயா கமகே, மலிக் சமரவிக்கிரம ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.