டிசம்பர் 7, 1996 பகல் 12 மணி. பூட்ஸ் கால்கள் தடதடக்க போயஸ் கார்டனுக்குள் நுழைந்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, அடுத்த ஐந்து நாட்களில் ஒரு கட்சித் தலைமையின் விதியையே மாற்றும் சாட்சியங்களைக் கைப்பற்றியது.
சரியாக 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பத்தைச் சந்தித்துள்ளது போயஸ் தோட்டக் கதவுகள்.
கடந்த நவம்பர் 17 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இளவரசியின் மகள் ஷகீலா சகிதம் போயஸ் கார்டனுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பூங்குன்றன் அறைக்குள் முதலில் சல்லடை போட்டனர்.
பின்னர் போயஸ் இல்லத்தின் கீழ்த்தளத்திலுள்ள சசிகலாவின் அறை உட்பட மூன்று அறைகளைச் சோதனையால் துளைத்தெடுத்தனர்.
சசிகலாவின் அறையில் இருந்து தலா இரண்டு லேப்டாப்புகளும் பென் டிரைவ்களும் கைப்பற்றப்பட்டன.
பூங்குன்றன் அறையிலிருந்து ஜெயலலிதாவிற்கு வந்திருந்த கடிதங்களையும் வருமான வரித்துறை கைப்பற்றியது.
இதற்கெல்லாம் மேலாகச் சோதனையில் சிக்கிய செப். 22 இரவு சீ.சீ.டி.வி. காட்சிகள்தான் வருமான வரித்துறை அதிகாரிகளை வியர்க்க வைத்துவிட்டது.
அன்றிரவு தான் மூர்ச்சையான நிலையில் அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதா அம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார்.
போயஸ் தோட்டத்தில் சோதனையில் ஈடுபட்ட வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பேசினோம்.
நவம்பர் 9 ஆம் திகதி முதல் அடையாரிலுள்ள பூங்குன்றனின் வீட்டில் நடைபெற்ற வருமான வரிச்சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினோம்.
குறிப்பாக 2011 க்குப் பிறகு மரத்தொழிலில் பூங்குன்றன் ஈடுபட்டு வருவதும் சுமார் 100 கோடிக்கு பல்வேறு முதலீடுகள் செய்திருப்பதும் எங்களது சோதனையில் தெரியவந்தது.
இது தொடர்பாக அவரிடம் நுங்கம்பாக்கம் வருமான வரி புலனாய்வுப் பிரிவு அலுவலகத்தில் விசாரித்து வந்தோம்.
பூங்குன்றனிடம் அவரது சொத்துக்கணக்கு, முதலீடுகள் தொடர்பான கேள்விகள் முன்வைக்கப்பட்டன. டிச. 16, 2011 இந்த ஒரே நாளில் மட்டுமே, ஸ்ரீ ஹரி சந்தனா எஸ்டேட்ஸ், ஸ்ரீ ஜெயா பைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஜாஸ் சினிமாஸ் உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜாஸ் சினிமாஸில் இருந்து தாமதமாக விலகினாலும் மற்றப் பொறுப்புகள் அனைத்தையும் மார்ச் 4, 2013 இல் துறந்துள்ளார்.
அதாவது டிச 19, 2011 இல் சசிகலா குடும்பத்தை ஜெயலலிதா விலக்கி வைப்பதற்கு முன்னதாக இந்த நிறுவனங்கள் அனைத்திலும் பூங்குன்றன் இயக்குநராக பொறுப்பேற்றுள்ளார்.
சசிகலா மீண்டும் ஜெயலலிதாவோடு இணைந்த பிறகு பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதன் பின்னணி குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.
முதலில் முரண்டு பிடித்த பூங்குன்றனுக்கு நாங்கள் முன்வைத்த ஆவணங்களைப் பார்த்தவுடன் அந்தப் புல் ஏ.சி.யிலும் வியர்த்துவிட்டது.
நாங்கள் எதிர்பார்க்காத ஒன்றை தானாகவே கக்கினார். கடந்த 2016 செப் 22 ஆம் திகதி இரவு போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து அப்பல்லோவிற்கு ஜெயலலிதா அழைத்துச் செல்லப்படும் சீ.சீ.டி.வி. காட்சிகள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.
போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கும் முடிவை எதிர்த்து தீபா தொடுத்த வழக்கு உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ளது.
இதனால் அங்கு சோதனையிட நீதிமன்ற உத்தரவு அவசியம் என்பதால் அவசர அவசரமாக உத்தரவு பெறப்பட்டது.
அன்றிரவு 8.20 மணிக்கு பூங்குன்றன், ஷகீலா, அவரது கணவர் ராஜராஜன் சகிதம் கூடுதல் இயக்குநர் தலைமையில் சுமார் 15 அதிகாரிகள் போயஸ் கார்டன் சென்றடைந்தோம்.
முதலில் அனுமதி மறுத்த பொலிஸார் நீதிமன்றத்தின் உத்தரவைக் காட்டியதும் அனுமதித்தனர்.
போயஸ் இல்ல வளாகத்திற்குள் இருக் கும் தனி இரண்டு மாடி கட்டடத்தில் தான் பூங்குன்றனின் அறை உள்ளது. அதில் முதலில் சோதனையிட்டோம்.
அவருடைய கம்பியூட்டரிலிருந்த சீ.சீ.டி.வி. காட்சிகளை ஆராய்ந்ததில் செப் 22 ஆம் திகதி இரவு 9 மணி முதல் போயஸ் இல்லம் பரபரப்பாகக் காணப்படுவதும் 10.06 மணிக்கு அப்பல்லோ மருத்துவமனையின் அம்புலன்ஸ் ஒன்று கார்டனுக்குள் நுழைவதும் பதிவாகியிருந்தது.
10.13 மணிக்கு மூர்ச்சையான நிலையில் நைட்டியோடு ஜெயலலிதா அம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்படுவதும் பதிவாகியுள்ளது.
இந்தக் காட்சிகள் இருந்த கம்பியூட்டர் ஹார்ட்டிஸ்க் உட்பட அனைத்து எலெக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினோம்.
இது போக சசிகலா அறையிலும் பல்வேறு ஆவணங்களும், பென்டிரைவ், லேப்டாப்களும் சிக்கியுள்ளன. அவற்றின் மீதான ஆய்வுகள் நடைபெறுகிறன.
தேவைப்பட்டால் மீண்டும் போயஸ் இல்லத்தில் சோதனையிடுவோம் என்றனர்.
இந்த சீ.சீ.டி.வி. காட்சிகள் ஒருபுறமிருக்க, அ.தி.மு.க. வின் அறக்கட்டளைகள் விவகாரம் பூதாகரமாகியுள்ளது. அக்கட்சியின் சீனியர்கள் கூறுகையில்; அ.தி.மு.க.விற்கு அண்ணா, டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என இரண்டு அறக்கட்டளைகள் உள்ளன.
ஒன்று எம்.ஜி.ஆர். தொடங்கியது. மற்றொன்று ஜெயலலிதா தொடங்கியது. இவற்றிற்கு ஜெயலலிதாவும் பூங்குன்றனும் தான் நிர்வாகிகளாக இருந்தனர்.
அவ்வப்போது கட்சிக்கு வழங்கப்படும் நிதியிலிருந்து ஒரு தொகையை இந்த அறக்கட்டளைகளில் ஜெயலலிதா செலுத்திவந்தார். இதன் மூலம் வருடந்தோறும் பல கோடி ரூபாய் அளவிற்கு இரு அறக்கட்டளைகளுக்கும் நிதி சேர்ந்துள்ளன.
கடந்த பல வருடங்களில் அவ்வப்போது சிறு சிறு உதவிகள் செய்ததைத் தவிர மீதி 40 முதல் 50 கோடிகள் ரூபாய் பணம் அப்படியே அறக்கட்டளையில் தான் உள்ளது. ஜெயலலிதா மறைந்த பிறகு இவ்விரண்டு அறக்கட்டளைகளும் பூங்குன்றன் வசம் வந்தன.
இந்நிலையில் அக்குடும்பத்தினருக்கு பணம் முடக்கம் ஏற்படவே இவ்விரண்டு அறக்கட்டளைகளையும் முக்கியமான நபர் பெயரில் மாற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக சசிகலா பரோலில் வெளிவந்த சமயத்தில் பூங்குன்றனிடமிருந்து சுமார் 20 வெற்றுப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது.
இப்பத்திரங்களை பதிவுசெய்ய சென்னையிலுள்ள ஐந்து பத்திரப் பதிவாளர்களை இரவில் அழைத்துப் பேசியபோதுதான் வருமான வரித்துறை மோப்பம் பிடித்துள் ளது. இதனை தொடர்ந்தே ரெய்டு காட்சிகள் அரங்கேறின. சசிகலா குடும்பத்திற்கு இனித் தொடர் சிக்கல்தான் என்றனர்.
சீ.சீ.டி.வி. காட்சிகளும் அறக்கட்டளை தொடர்பான ஆவணங்களும் தற்போது வருமான வரித்துறையின் வசம் இருப்பதால் அக்குடும்பம்தான் சப்த நாடியும் ஒடுங்கிப் போன நிலையில் உள்ளதாம்.
பூங்குன்றனை அப்ரூவராக்குவதற்கும் வருமான வரித் துறை முயற்சி மேற்கொள்கிறதாம்.
இத்தாக் குதல் இத்தோடு நிற்காது இனிவரும் நாட்களில் பல அதிரடிக் காட்சிகளும் திருப் பங்களும் அரங்கேறும் என்கிறது நுங்கம் பாக்கம் ஹைரோடு.