ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்த டிரம்ப்பின் முடிவுக்கு அரபு நாடுகள் கூட்டமைப்பு கண்டனம்

335 0

ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அறிவித்ததை அமெரிக்க அதிபர் டிரம்ப் திரும்ப பெற வேண்டும் என 22 அரபு நாடுகளின் வெளியுறவுத்துறை மந்திரிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜெருசலேம் நகரை தலைநகராக பாலஸ்தீன் மற்றும் இஸ்ரேல் நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. இந்த நிலையில், சர்ச்சைக்குரிய ஜெருசலேம் நகரை இஸ்ரேல் நாட்டின் தலைநகரமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 6-ம் தேதி அங்கீகரித்தார். மேலும், டெல் அவிவ் நகரில் செயல்பட்டு வரும் தனது நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்றவும் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் அறிவிப்பு பிராந்தியத்தில் மேலும் குழப்பத்தையும், வன்செயல்களையும் அதிகரிக்கும் என அரபு நாடுகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டாடிய நாடுகள் உள்பட மொத்தம் 22 நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. டொனால்டு டிரம்ப்பின் அறிவிப்பிற்கு உலகம் முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு எகிப்து தலைநகர் கெய்ரோவில் கூடிய அரபு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள், டிரம்ப்பின் அறிவிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினர். பின்னர், அரேபிய லீக் நாடுகளின் தலைவர் அகமது அபோல்-காய்ட் அளித்த பேட்டியில், ‘‘நாங்கள் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்மானத்தை எடுத்துள்ளோம். இந்த முடிவு தெருக்களில் பிரதிபலிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அரசியல் பணி என்பது பொறுப்பானது. ஜெருசலேம் கடந்த 50 ஆண்டுகளாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த போர் நீட்டிக்கப்பட்டு உள்ளது” என்றார்.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாலஸ்தீனிய வெளியுறவு மந்திரி ரியாத் அல்-மாலிகி பேசுகையில், “இந்த கூட்டத்தின்மூலம் அரபு நாடுகள் இடையிலான வேற்றுமைகள் மறைந்து முழுமையான ஒற்றுமை ஏற்பட்டுள்ளது. டிரம்ப்பின் அறிவிப்பு, 2002-ல்  மேற்கொள்ளப்பட்ட அரேபிய அமைதி திட்டத்திற்கு புறம்பானது, சர்வதேச சட்டத்தை மீறும் செயலுமாகும்” என்றார்.

ஜெருசலேம் விவகாரம் தொடர்பாக இம்மாத இறுதியில் அரபு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மீண்டும் கூடி விவாதிக்க உள்ளனர். அதில், முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக அரபு நாடுகளின் அவசர உச்சி மாநாடு ஒன்றை ஜோர்டானில் நடத்த வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment