மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“மத்திய அரசு பணிகளில் மண்டல் கமிஷன் பரிந்துரையின்படி அறிவிக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக செயல்படுத்தப்படவில்லை” என்றும், “1.1.2017 வரை மத்திய அரசின் எந்தத் துறையிலும் 27 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலான பணியிடங்கள் நிரப்பப்படவில்லை” என்றும் ஒரு ஆங்கில நாளிதழில் வெளி வந்துள்ள செய்தி, சமூகநீதியில் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் பேரதிர்ச்சி தருவதாக அமைந்திருக்கிறது.
தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில் 35-க்கு 24 அமைச்சகங்களில் ஏ பிரிவு அதிகாரிகளாக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து 17 சதவீதம் பேர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளார்கள். பிபிரிவு ஊழியர்கள் 14 சதவீதம், சி பிரிவு ஊழியர்கள் 11 சதவீதம் டிபிரிவு ஊழியர்கள் 10 சதவீதம் என்ற அளவில் மட்டுமே நடைபெற்றுள்ள நியமனங்கள் மூலம் மண்டல் கமிஷன் பரிந்துரை செய்தும், நீண்ட காலமாகக் கிடப்பில் இருந்துவந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டுக் கொள்கை, தலைவர் கருணாநிதியின் தொய்வில்லாத் தொடர் முயற்சியின் காரணமாக, சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் பிரதமராக இருந்த போது ஏற்கப்பட்டு நடைமுறைக்கு வந்தது எனினும், மத்திய அரசு அலுவலகங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டுள்ளதற்கு தி.மு.க.வின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
24 வருடங்களுக்குப் பிறகும் 27 சதவீத இடஒதுக்கீட்டின் படி வேலை வாய்ப்புகள் மத்திய அரசு அலுவலகங்களில் வழங்கப்படவில்லை என்பது சமூக நீதிக்கும், வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பல கோடிக் கணக்கான எண்ணற்ற பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்களுக்கும் தீங்கு விளைவிக்கும் துரோகச் செயல். சமூக நீதிக்கு எதிரான வறட்டு எண்ணவோட்டம் கொண்டவர்களின் “இல்லங்களாக” மத்திய அரசின் துறைகள் விளங்கி வருகின்றன என்ற கொடுமை இன்னும் தொடருவது நாட்டின் முன்னேற்றத்திற்கு மிகவும் ஆபத்தானது.
அது மட்டுமின்றி, போராடிப் பெற்ற இட ஒதுக்கீடு இப்படி அவமதிக்கப்படுவது நாட்டின் சமூக நீதி வரலாற்றில் அழிக்க முடியாத கரும்புள்ளியாகிவிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.
“மண்டல் கமிஷன் பரிந்துரைகளை உடனே அமல்படுத்த வேண்டும்” என்று தலைவர் கருணாநிதி 12.5.1989 அன்று வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். அதைத் தொடர்ந்து அன்று தேசிய முன்னனி அரசின் பிரதமராக இருந்த சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் தன் பதவியையும் துச்சமென மதித்து “மத்திய அரசு பணிகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும்” என்று 7.8.1990 அன்று பாராளுமன்றத்தில் கர்ஜித்தார்.
அந்த புரட்சிகரமான அறிவிப்பை தொடர்ந்து 8.9.1993- லிருந்து மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 27 சதவீத இட ஒதுக்கீடு செயல்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என்ற “சமூக நீதி”க் கொள்கை தொடருகிறது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டின் முழுப் பயனை பிற்படுத்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் பெற முடியவில்லை என்பது மிகுந்த வேதனையானது.
இந்நிலையில், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தையும் வலு விழக்கச் செய்யும் தீவிர முயற்சிகளில் மத்திய பா.ஜ.க. அரசு இறங்கியிருப்பதும், மாநிலங்களில் உள்ள ஆணையங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் செயல்படத் துடிப்பதும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இருக்கிறது. மண்டல் கமிஷன் தலைவராக இருந்த பி.பி. மண்டல் அவர்கள், “ஜனநாயக நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்க வேண்டும் என்ற சட்டபூர்வமான உரிமையும் விருப்பமும் இருக்கிறது” என்று குறிப்பிட்டு விட்டு, “பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவது மற்றவர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தலாம்.
ஆனால் அந்த வயிற்றெரிச்சல் சமூக சீர்திருத்ததை தடை செய்யும் “வீட்டோ” அதிகாரமாக இருக்க அனுமதிக்க முடியாது” என்று கூறிவிட்டுதான் “27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” என்று பரிந்துரைத்தார் என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
ஆகவே மத்திய அரசின் அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்து ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக வெளியிட்டு, “சிறப்பு தேர்வுகள்” மூலம் அனைத்துத் துறைகளிலும், அமைச்சகங்களிலும், அரசியல் சட்ட அமைப்புகளிலும் இட ஒதுக்கீட்டை முழு அளவில் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய தீவிர நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 52 சதவீதத்திற்கும் மேல் உள்ள பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்திற்கு 27 சதவீத இடஒதுக்கீடு போதாது என்று மண்டல் கமிஷன் அறிக்கையிலேயே சுட்டிக் காட்டப்பட்டுள்ளதால், மத்திய அரசு அலுவலகங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு இடஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, அதற்கு பாராளுமன்றத்தின் மூலம் உரிய சட்டப் பாதுகாப்பு வழங்கிட பா.ஜ.க. அரசு முன் வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.