ஆர்.கே.நகரில் வெளி மாவட்ட வாகனங்களுக்கு கட்டுப்பாடு!

484 0

தலைமை தேர்தல் அதிகாரி கண்டித்ததால் ஆர்.கே.நகரில் வெளி மாவட்ட வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மேலும் சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதிகள் மீறப்படுவதாக தேர்தல் பார்வையாளர்கள் இந்திய தலைமை தேர்தல் கமி‌ஷனிடம் புகார் அளித்தனர். இதையடுத்து அவர்கள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் விசாரணை நடத்தினார்கள்.

இதையடுத்து அவர் ஆர்.கே. நகர் தேர்தல் தொடர்பாக சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆர்.கே.நகரில் ஏன் சரியாக வாகன சோதனை நடத்தவில்லை என்று கேட்டு அதிகாரிகளை கண்டித்தார். தேர்தல் விதிமீறல் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாகன சோதனை கடுமையாக்கப்பட்டது. பெரம்பூர், திருவொற்றியூர், ராயபுரம், துறைமுகம் ஆகிய இடங்களில் இருந்து ஆர்.கே. நகர் தொகுதிக்குள் நுழையும் இடங்களில் 11 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று இரவு முதல் இங்கு துணை ராணுவப் படையினர், சிறப்பு காவல் படையினர், தமிழக காவல் படையினர் நிறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இங்கு விதிகளை மீறி அனுமதி பெறாமல் தொகுதிக்குள் நுழைந்த 14 வாகனங்கள் நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டன. இன்று காலையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வெளி மாவட்ட வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அனுமதி பெறாத வெளி மாவட்ட வாகனங்களை ஆர்.கே. நகர் தொகுதிக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து பிரசாரத்துக்காக வந்திருந்த அரசியல் கட்சியினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Leave a comment