கிளிநொச்சி பிரதேசத்தில் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தின் இரண்டு சந்தேகநபர்கள் மாங்குளம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு(8) மாங்குளம் – மல்லாவி வீதியூடாக சென்று கொண்டிருந்த ஊடகவியலாளரைத் தாக்கிய நபர்கள் அவரைக் கடத்துவதற்கும் முயற்சித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி – பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாஸ்கரன் என்னும் ஊடகவியலாளர் நேற்று முன்தினம் இரவு 8.42 அளவில் மாங்குளம் – பாண்டியன்குளப் பகுதியில் உள்ள அவருடைய தாயார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து மீண்டும் வீடு திரும்பி வந்துகொண்டிருந்த அவரை வன்னிவிளான்குளப் பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் வழிமறித்துள்ளனர்.
இருப்பினும், அங்கு நிற்காமல் ஊடகவியலாளர் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்திக் கொண்டு சென்றுள்ளார்.
இலக்கத்தகடு மறைக்கப்பட்ட மோட்டர் சைக்கிளில் ஊடகவியலாளரை துரத்திய சந்தேகநபர்கள், அவரது தலை மற்றும் கையில் பொல்லினால் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கிருந்து தப்பிய ஓடிய ஊடகவியலாளர் மாங்குளம் சந்தியில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் ஊடகவியலாளரின் மோட்டர் சைக்கிளுக்கு அருகில் நின்ற இளைஞரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருவதை அவதனித்த அக் குழுவினர் அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, பிரதேச மக்கள் ஒருவரை மடக்கி பிடித்துள்ளனர்.
எனினும், ஏனைய இருவரும் தப்பிச்சென்றுள்ளனர்.
இதனையடுத்து பிடிக்கப்பட்ட சந்தேகநபர் மோட்டார் சைக்கிளுடன் மாங்குளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளையடுத்தே மேலும் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.