அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் அதிபர் டிரம்ப் கலந்து கொண்ட கூட்டம் குறித்து தவறான புகைப்படம் பதிவிட்ட பத்திரிகையாளர் அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
அமெரிகாவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பென்சாகோலா என்ற இடத்தில் அதிபர் டிரம்ப் நேற்று ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் ஆளே இல்லாத போன்ற புகைப்படம் ஒன்றை ‘வாஷிங்டன் போஸ்ட்’ நாளிதழின் பத்திரிகையாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதனை கண்டித்துள்ள அதிபர் டிரம்ப், “கூட்டத்திற்கு நான் வருவதற்கு முன்னர் எடுத்த புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேர் உள்ளே வருவதற்கு காத்துக்கொண்டு இருந்தனர். பொய்யான செய்தியை கொடுத்ததற்கு மன்னிப்பு கோர வேண்டும் மற்றும் அவரை வாஷிங்டன் போஸ்ட் இதழ் பணி நீக்கம் செய்ய வேண்டும்” என்று கடுமையான வார்த்தைகளால் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து, சம்பந்தப்பட்ட பத்திரிக்கையாளர் டிரம்ப்பிடம் மன்னிப்பு கோரியுள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்தும் நீக்கியுள்ளார்.