உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாகர்கோவில் நகரசபை தலைவர் மீனாதேவ் (பா.ஜ.க.) மற்றும் தி.மு.க- காங்கிரஸ், பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் டெண்டர் வைக்கப்பட்ட பணிகளுக்கு வேலைக்கான உத்தரவை உடனடியாக வழங்க வலியுறுத்தி நகரசபை அலுவலக கூட்டரங்கில் அதிகாரிகளை கண்டித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தலைவர் மீனாதேவ் மற்றும் கவுன்சிலர்களை சந்தித்து மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் பேசினார்.பின்னர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாகர்கோவில் நகரசபையில் நடந்து வரும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதன் மூலம் இப்பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காண வேண்டும்.மாநில அரசும், உள்ளாட்சி அமைப்புகளும் நல்லுறவு இருந்தால்தான் பொதுமக்களுக்கு நல்ல சேவை வழங்க முடியும். என்னை பொறுத்த வரை உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் பதவியை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து சாலை விபத்தில் சிக்கி மூளை சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த கோட்டார் வாகையடி தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவன் அவினாஷ் வீட்டிற்கு சென்று அவரது தந்தை சாமிநாதன் மற்றும் அவரது உறவினர்களுக்கு மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் ஆறுதல் கூறினார்.