உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.திருத்தணி மற்றும் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அவர்களில் 24 பேர் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.அவர்களை இன்று காலை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா சந்தித்து ஆறுதல் கூறினார். ஒவ்வொருவரிடமும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டு அறிந்தார்.
பின்னர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை நான் சந்தித்தேன். சிகிச்சை அளிக்கப்படும் ஆஸ்பத்திரியே சுத்தமாக இல்லை. பல நோயாளிகளுக்கு கொசு வலை வழங்கவில்லை.
கிராமங்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாமல் உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது மட்டும் பிளிச்சிங் பவுடர் தெளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கும், கொசுவலை கொடுக்கிறார்கள். இது கண்துடைப்பு நாடகமே.
மக்களும், அரசும் இணைந்து செயல்பட்டால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அரசுக்கு பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். இதனை மறந்து விடக்கூடாது.
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி என்பது குறித்து கேப்டன் விரைவில் அறிவிப்பார்.ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.