வட கொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வட கொரியா சிம்ம சொப்பனமாக உள்ளது. இந்த நாடுகளை மிரட்டும் வகையில் தொடர்ந்து அணு குண்டு சோதனைகளையும், ஏவுகணை சோதனைகளையும் நடத்துகிறது.
இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் நிலவுகிறது. சமீப காலமாக பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியத்தை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை வீசி வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
இந்த ஏவுகணைகள் ஜப்பான் நிலப்பரப்பின் மீது பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை அடைகிறது. வடகொரியாவின் இத்தகைய நடவடிக்கை ஜப்பானுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே வட கொரியாவின் மிரட்டலை சமாளிக்க ஜப்பான் நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த ஏவுகணைகளை அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து வாங்க திட்டமிட்டுள்ளது.
ஜெ.ஏ.எஸ்.எஸ்.எம். மற்றும் எல்.ஆர்.ஏ.எஸ்.எம். எனப்படும் நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து வாங்குகிறது. இவை விண்ணில் இருந்து பூமியை நோக்கி செலுத்தக் கூடியது. 900 கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த இந்த ஏவுகணைகளை போர் விமானங்களில் இருந்து செலுத்த முடியும்.
அதே போன்று 500 கி.மீ தூரம் பறந்து சென்று தாக்கும் காங்ஸ்பெர்க் என்ற ஏவுகணையை நார்வேயிடம் இருந்து வாங்குகிறது. இத்தகவலை ஜப்பான் ராணுவ மந்திரி இட்ஸ்னோரி அனோடெரா தெரிவித்துள்ளார்.
அதற்கான தொகையை அடுத்த ஆண்டு (2018) ஏப்ரல் மாதம் நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தில் சிறப்பு பட்ஜெட் மூலம் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
போர் ஒழிப்பு கோட் பாட்டில் பல்லாண்டுகளாக உறுதியுடன் இருக்கும் ஜப்பான் வடகொரியா மிரட்டலை சமாளிக்கவும் நாட்டின் பாதுகாப்புக்காகவும் இத்தகைய நடவடிக்கையை மேற் கொண்டுள்ளதாகவும் ராணுவ மந்திரி தெரிவித்தார்.