வங்காளதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேச ஊடக அதிபருமான மிர் காசிம் அலிக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிரான சீராய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று தள்ளுபடி செய்தது.
வங்காள தேசத்தில் 1971-ஆம் ஆண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த சுதந்திரப் போராட்டத்தின்போது ஒரு தரப்பினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், போர்க்குற்றங்களிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத்தொடர்ந்து, இத்தகைய போர்க்குற்றங்களை விசாரிக்க கடந்த 2010-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இங்கு நடைபெற்றுவரும் வழக்குகளின் விசாரணையில், பலருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஜமாத் இ இஸ்லாமி கட்சி தலைவரும் மற்றும் வங்கதேசத்தின் பிரபல ஊடக அதிபருமான மிர் காசிம் அலி என்பவருக்கும் மரண தண்டனை விதித்து 2-11-2014 அன்று தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது.
அவர் மீது இளம் விடுதலைப் போராட்ட வீரர்கள் இருவரை சித்ரவதை செய்து, கொன்று உடல்களை சிட்டகாங் ஆற்றில் வீசியது உள்பட 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்படடன. அமெரிக்காவின் கைகோர்த்துகொண்டு நாட்டுக்கு எதிராக செயல்பட்டது உள்பட இதில் 10 குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மிர்ர் காசிம் அலியின் வழக்கறிஞர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து கடந்த ஜூன் மாதம் 6-ம் தீர்ப்பளித்த நீதிபதி வங்காளதேச சிறப்பு தீர்ப்பாயம் முன்னர் அளித்திருந்த மரண தண்டனையை உறுதிப்படுத்தி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மிர் அலியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு (ரிவியூ) மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹா தலைமையிலான ஐந்து நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இன்று அறிவித்துள்ளது.
இந்த உத்தரவை வரவேற்றுள்ள அரசுதரப்பு தலைமை வழக்கறிஞர், ‘மிர் அலி உடனடியாக ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யாவிட்டாலோ, அல்லது, அவரது கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டாலோ.., அவர் எந்த நேரத்திலும் தூக்கிலிட்டு கொல்லப்படலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.