சிறிலங்காவில் சீனாவுக்கு செக் வைக்க விரும்பும் இந்தியா!

2991 0

சிறிலங்கா உட்பட பத்து கரையோர நாடுகளுடன் இந்தியா தனது கடல்சார் புலனாய்வு தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக நவம்பர் 1 அன்று இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா அறிவித்திருந்தார். இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கோவா கடல்சார் கருத்தரங்கிலேயே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.

இந்தியாவின் இந்த அறிவிப்பானது இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதை நோக்காகக் கொண்டதாக ஊடகங்கள் அறிக்கை வெளியிட்டன. இந்திய மாக்கடலில் சீனாவின் கப்பல்கள் நடமாடுவது இந்தியாவின் பாதுகாப்பிற்கும் இராஜதந்திர நலன்களுக்கும் அச்சுறுத்தலாக உள்ளதாக கருதப்படுகிறது.

‘சீனாவால் தயாரிக்கப்பட்ட கடன் பொறியிலிருந்து’ சிறிலங்காவை மீட்டெடுப்பதற்கு இந்தியாவும் அமெரிக்காவும் முயற்சிப்பதாக ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக தென்-மத்திய இந்திய மாக்கடலைத் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்திய மாக்கடலில் தமது செல்வாக்கை விரிவுபடுத்த விரும்புகின்றன’ என ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ ஊடகத்தில் வெளிவந்த பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா தனது கடல்சார் தகவல்களை கரையோர நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள தீர்மானமானது இந்திய மாக்கடலில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை முறியடிப்பதற்கான நோக்கைக் கொண்டுள்ளதாக இந்தியாவின் முதன்மை ஊடகமான ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ வில் குறிப்பிடப்பட்டதானது இந்தியாவின் கருத்தை வெளிப்படுத்தி நிற்கிறது.

ஆனால் இந்தியாவிலுள்ள வல்லுனர்களின் கருத்துக்கள் வேறுபட்டதாகவும் உள்ளன. அதாவது சிறிலங்காவானது சுயாதீனமான பொருளாதாரக் கோட்பாட்டைக் கொண்டுள்ள ஒரு நாடாக உள்ளதாகவும் போரின் பின்னரான இக்காலப்பகுதியில் சிறிலங்காவில் பல்வேறு கட்டுமான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவையுள்ளதால் சிறிலங்கா, சீனாவின் உதவியை நாடியுள்ளதாகவும் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

‘போருக்குப் பின்னர் சிறிலங்கா தனது கட்டுமான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு பல நாடுகளின் உதவியைப் பெறுவதால் இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற அதிகாரத்துவ நாடுகளின் மத்தியில் சமவலுவைப் பேணுவதில் இடர்களை எதிர்கொள்ளும்.

ஆகவே மாறி மாறி ஆட்சிக்கு வரும் சிறிலங்கா அரசாங்கங்கள் சீனாவுடன் நட்புறவைப் பேணுகின்றதா அல்லது இல்லையா என்பதை இந்தியா கவனத்திற் கொள்ளாது ராஜபக்ச ஆட்சியுடன் மேற்கொண்டது போன்று சுயாதீன பூகோள-மூலோபாயக் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதன்மூலம் சிறிலங்காவுடனும் ஏனைய அயல்நாடுகளுடனும் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கு அந்த நாடுகளின் உள்விவகாரங்களில் பிராந்திய அதிகாரத்துவ நாடுகள் தொடர்பைப் பேணுகின்றனவா என்பது இந்தியாவிற்கு பிரச்சினையாக அமையாது’ என கண்காணிப்பு ஆய்வு நிறுவகத்தின் சென்னைக் கிளைக்கான இயக்குனரும் மூத்த அதிகாரியுமான என்.சத்திய மூர்த்தி தெரிவித்தார்.

‘தாம் செல்வாக்குச் செலுத்த விரும்பும் வேற்றுப் பிராந்திய அதிகாரத்துவ நாடுகள் தமது சொந்த பூகோள-மூலோபாய நலன்களை சிறிய நாடுகளில் கூட செலுத்த முடியாவிட்டால் அவை இந்த நாடுகள் மீதான தமது ஆர்வத்தை இழப்பதுடன் இப்பிராந்தியத்தை விட்டு வெளியேறி தமது பாரம்பரிய பிராந்தியங்களுக்குத் திரும்பிச் சென்றுவிடும் நிலை உருவாகும்’ என இயக்குனர் சத்திய மூர்த்தி மேலும் குறிப்பிட்டார்.

சிறிலங்காவுடனான இந்தியாவின் கரையோர ஒத்துழைப்பு புதியதல்ல எனவும் இந்தியா ஏற்கனவே சிறிலங்காவிற்கு கரையோர கண்காணிப்பு படகுகள் இரண்டை வழங்குவதாக உறுதியளித்ததாகவும் இதில் ஒரு படகு கடந்த செப்ரெம்பரில் வழங்கப்பட்டதாகவும் மற்றையது அடுத்த ஆண்டு வழங்கப்படும் எனவும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

இதேபோன்ற கரையோர கண்காணிப்புப் படகுகள் 2006 மற்றும் 2008ல் சிறிலங்காவிற்கு வழங்கப்பட்டன. இந்திய மாக்கடலில் உள்ள சிஷெல்ஸ், மாலைதீவு, மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கு இந்தியாவினால் கப்பல்கள், கண்காணிப்புப் படகுகள், குறுக்கீட்டுப் படகுகள் போன்றன வழங்கப்படுவதுடன், இந்த நாடுகளின் திறன் மேம்படுத்தலிற்கும் இந்தியா உதவுகின்றது. இது இந்திய இராஜதந்திரத்தின்  மிக முக்கிய கூறாகும்.

இவை தவிர, இந்தியா தனது அயலிலுள்ள தீவுகளுக்கு அவற்றின் கரையோர கண்காணிப்பு வலைப்பின்னலை உருவாக்குவதற்கும் உதவுகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த 450 வீரர்களுக்கு இந்தியா பல்வேறு கடல்சார் பயிற்சிகளை வழங்குகின்றது.

இந்திய மற்றும் சிறிலங்கா இராணுவத்தினர் நீண்டகாலமாக மிக நெருக்கமான நல்லுறவைப் பேணிவருகின்றனர். இவர்கள் பல்வேறு மட்டங்களிலும் தமக்கிடையே இராணுவப் பயிற்சிகளை பரிமாறிக் கொள்கின்றனர். இதுமட்டுமல்லாது இராணுவத் தகவல்களும் இவ்விரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்தும் பரிமாறப்படுகின்றன.

சில சந்தர்ப்பங்களில் இத்தகவல்கள் சிறிலங்கா இராணுவத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை வெற்றிகரமாகக் கடலில் தடுத்து நிறுத்துவதற்கும் உதவியுள்ளன.

ஆபத்து விளைவிக்காத ஆயுதங்களை சிறிலங்கா கொள்வனவு செய்வதற்கு 100 மில்லியன் டொலரை கடனாக வழங்குவதென இந்தியா தீர்மானித்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளில், இந்தியாவினால் சிறிலங்காவிற்கு L-70 விமான எதிர்ப்பு ஆயுதங்கள் – 24, USFM கண்காணிப்புக் கருவிகள்- 11, நிலக்கண்ணிவெடி பாதுகாப்பு வாகனம் -10, போர்க் களக் கண்காணிப்பு ராடர்கள் -24 போன்றன வழங்கப்பட்டுள்ளன.

அரசியல் ரீதியாகக் கூட சிறிலங்காவும் இந்தியாவும் மிக நெருக்கமாக உள்ளன. கடந்த மே மாதம் இந்தியப் பிரதமர் மோடி சிறிலங்காவிற்கு உத்தியோகபூர்வ பயணம் செய்தமையானது சிறிலங்கா மற்றும் இந்திய ஊடகங்களால் முதன்மைப்படுத்தப்பட்டன.

ஏனெனில் இந்தியப் பிரதமர் ஒருவர் 28 ஆண்டுகளின் பின்னர் முதன் முதலாக சிறிலங்காவிற்குப் பயணம் செய்த முதலாவது அரசமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடியின் பயணம் அமைந்திருந்தது.

அத்துடன் சீனாவின் செல்வாக்கு சிறிலங்காவில் அதிகரித்திருந்த நிலையில் சீனாவுடன் நெருங்கிய உறவைப் பேணியதுடன் இந்தியாவுடனான அரசியல், மூலோபாய மற்றும் பாதுகாப்பு உறவை முறித்துக் கொண்ட சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தேர்தலில் தோல்வியடைந்த காலப்பகுதியில் நரேந்திர மோடி சிறிலங்காவிற்குப் பயணம் செய்ததானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

குறிப்பாக சிறிலங்கா துறைமுகத்தில் சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் மீண்டும் மீண்டும் தரித்து நின்ற போது இந்தியா அதனை எதிர்த்திருந்தது.

சீனாவை இந்தியா எதிர்த்த போதிலும் முற்றுமுழுதாக இந்தியாவால் சீனாவை ஓரங்கட்ட முடியவில்லை. ஏனெனில் இந்தியாவும் சீனாவும் வருடாந்தம் 71.5 பில்லியன் டொலர் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன. இன்று சீனாவானது இந்தியாவின் மிகப் பாரிய வர்த்தகப் பங்காளி நாடாக உள்ளது.

கடந்த ஆண்டு சீனாவிடமிருந்து இந்தியா 61.3 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதுடன், சீனாவிற்கு இந்தியா 10.2 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகச் செயற்பாடுகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் 37.2 பில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்டது.

ஆனால் இன்று இத்தொகை 51.1 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. ஆகவே இப்புள்ளிவிபரமானது இந்தியாவின் கணிசமான பொருளாதாரமானது சீனாவுடனான வர்த்தகத்தில் தங்கியுள்ளதை சுட்டிநிற்கிறது.

இந்தியா தனது கட்டுமான அபிவிருத்திக்காகவும் சீனாவை எதிர்பார்க்கின்றது.

‘அடுத்த பத்தாண்டில் இந்தியாவின்  கட்டுமான அபிவிருத்திக்காக 1.5 ரில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இந்தியாவில் 70,000 கிராமங்கள் உள்ளன. 2019 அளவில் இக்கிராமங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் செயற்திட்டம் ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது’ என கடந்த ஆண்டு சீனாவில் இடம்பெற்ற AIIB இன் ஆளுநர்கள் சபையின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இந்தியாவின் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இவ்வாறு தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.

ஆங்கிலத்தில் – Pankaj Yadav
வழிமூலம்    – Ceylon today
மொழியாக்கம் – நித்தியபாரதி

Leave a comment