முன்னாள் உதயன் பத்திரிகையின் ஆசிரியரான ந.வித்தியாதரனை தமிழரசுக்கட்சிக்குள் உள்ளீர்த்து முக்கிய பதவிகளை வழங்கினால் உதயன் பத்திரிகை முழு அளவில் தமிழரசுக்கட்சியை எதிர்த்து செய்திகளை வெளியிடுமென அதன் உரிமையாளரான ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.மூத்த ஊடகவியலாளர் என்.வித்தியாதரனது மைத்துனான ஈ.சரவணபவன் தற்போது தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.
தற்போதைய உள்ளுராட்சி தேர்தலில் ந.வித்தியாதரனை கட்சிக்குள் இணைத்து யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதனை தமிழ் அரசுக் கட்சியின் ஈ.சரவணபவன் மற்றும் சீ.வி.கே.சிவஞானம் உள்ளிட்ட சிலர் எதிர்த்துவருகின்றனர்.அத்துடன் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கு கடும் அழுத்தம் வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது.
இதனிடையே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை இராப்போசனத்துக்கு நேற்றிரவு அழைத்த கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர், இந்த அழுத்தத்தை வழங்கினார் என தெரியவருகின்றது. எதிர்காலத்தில் ஊடக பலத்தை தமிழ் அரசுக் கட்சி இழக்கும் நிலை ஏற்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னரும் வடமாகாணசபை தேர்தலின் போது ந.வித்தியாதரனிற்கு ஆசனங்களை வழங்க கூடாதென தடுத்துநிறுத்தப்பட்டிருந்தது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும்; உதயன் பத்திரிகைக்கு போட்டியாக ந.வித்தியாதரன் தற்போது காலைக்கதிர் எனும் நாளிதழை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.