வடமாகாணத்தின் பாதைகள் அபிவிருத்திக்கு 3363 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது.
உள்நாட்டுப் போருக்குப் பின்னரான வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் பாதைகளின் அபிவிருத்தி முக்கிய அம்சமாக இடம்பெற்றிருந்தது. இதனைக் கருத்திற் கொண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் பாதைகள் அபிவிருத்தி செயற்திட்டமொன்றை உள்ளூராட்சி,மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுத்திருந்தது.
இச்செயற்திட்டத்தின் கீழ் இதுவரை 3363 மில்லியன் ரூபா செலவழிக்கப்பட்டுள்ளதாக தற்போது அமைச்சின் புள்ளிவிபரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது. வடமாகாணத்தில் உள்ள 96 வீதமான பாதைகள் இதன் மூலம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த வருட இறுதிக்குள் எஞ்சிய பாதைகளின் அபிவிருத்தி வேலைகளும் நிறைவு செய்யப்படவுள்ளது.
இதற்கிடையே வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் மாகாண சபை நிர்வாகத்தின் கீழ் பராமரிக்கப்படும் பாதைகளை அபிவிருத்தி செய்யவும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. வவுனியாவில் சுமார் 81 கிலோமீற்றர் நீளம் வரையான பாதைகளும், மன்னாரில் 72 கிலோமீற்றர் வரையான பாதைகளும் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.