புதிய பாடத்திட்ட வரைவு: பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து 60 குழுக்கள் ஆய்வு

291 0

புதிய பாடத்திட்ட வரைவு குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துகள் குறித்து 60 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. புதிய பாடப்புத்தகங்களில் அதிக படங்களை சேர்க்க கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.

1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை உள்ள பாடத்திட்டத்தை மாற்றி புதிய பாடத்திட்டத்தை தயாரிக்க முன்னாள் துணைவேந்தர் மு.அனந்தகிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு புதிய பாடத்திட்ட வரைவை தயாரித்துள்ளது.
இந்த பாடத்திட்ட வரைவு www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி கடிதம் மூலமாகவும், இ-மெயில் மூலமாகவும் 7,500 பேர் தங்களது கருத்துகளை தெரிவித்து உள்ளனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன் உள்ளிட்ட 21 நாடுகளில் இருந்தும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து இருந்தனர்.
இதில் 1,808 கருத்துகள் முக்கியம் வாய்ந்தவையாக உள்ளன. இந்த கருத்துகளை 60 குழுக்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஒவ்வொரு குழுவிலும் 15 முதல் 30 பேர் வரை இடம்பெற்று உள்ளனர்.
நடைமுறையில் உள்ள பாடப்புத்தகங்களில் உள்ள படங்களை விட கூடுதல் படங்களை புதிய பாடப்புத்தகத்தில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதத்திற்குள் பாடங்கள் எழுதப்பட்டு தயார் ஆகிவிடும்.மேற்கண்ட தகவலை கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a comment