கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை ஜெயலலிதா உயிரோடு இருந்ததை பார்த்தேன் என்று விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர் பாலாஜி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது தேர்தல் ஆவணங்களில் அவரது கைரேகை பதிவு செய்யப்பட்டது. தனது முன்னிலையில் ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யப்பட்டதாக சாட்சி கையெழுத்திட்டுள்ள அரசு மருத்துவர் பாலாஜி மற்றும் அரசு மருத்துவரும், நீரழிவு நோய் சிகிச்சை நிபுணருமான தர்மராஜன் ஆகியோருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.
அதன்படி நேற்று காலை 10.30 மணிக்கு மருத்துவர் தர்மராஜனும், 10.40 மணிக்கு மருத்துவர் பாலாஜியும் ஆணையத்தில் ஆஜராகினர்.
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவர் தர்மராஜனிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தர்மராஜன் பதில் அளித்தார். சுமார் 1½ மணி நேரம் அவரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார்.
இதன்பின்பு மருத்துவர் பாலாஜியிடம், நீதிபதி விசாரணை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் இந்த விசாரணை நடந்தது. இதைதொடர்ந்து ஆணையத்தில் இருந்து வெளியே வந்த மருத்துவர் பாலாஜி நிருபர்களிடம் கூறும் போது, ‘ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தேன். பல ஆவணங்களையும் அளித்துள்ளேன். லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சை குறித்தும், ஜெயலலிதா உணவு உட்கொண்டது குறித்தும் நீதிபதி கேள்வி எழுப்பினார். அந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்தேன். ஜெயலலிதா கைரேகை பதிவு செய்யப்பட்டது தொடர்பான ஆவணங்களை வருகிற 27-ந் தேதி ஆஜராகி தாக்கல் செய்ய உள்ளேன்’ என்றார்.
விசாரணையின் போது மருத்துவர் பாலாஜியிடம், ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவரை நேரில் பார்த்தீர்களா? என்று நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார்.
அதற்கு அவர், ‘லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே, எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் போன்றோர் மருத்துவமனைக்கு வந்தபோது அவர்களை ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த வார்டுக்கு அழைத்து சென்றேன். அப்போது ஜெயலலிதாவை பார்த்துள்ளேன்’ என்று கூறினார்.
மேலும், லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் மட்டுமல்லாமல் வேலூர், ஐதரபாத், பெங்களூர் போன்ற இடங்களில் இருந்தும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்ததாக மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.
லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட சிறப்பு மருத்துவ நிபுணர்கள் வந்தபோது அவர்களை ஜெயலலிதாவுக்கு, தான் அறிமுகம் செய்து வைத்ததாகவும் அவர் கூறினார்.
அப்போது நீதிபதி, உங்களை ஜெயலலிதாவிடம் அறிமுகம் செய்து வைத்தது யார்? என்று கேட்டார். அதற்கு, மருத்துவர் பாலாஜி பதில் எதுவும் சொல்லாமல் சிரிப்பை மட்டும் வெளிப்படுத்தினார்.
மேலும் விசாரணையின் போது, டாக்டர் பாலாஜி கூறியதாவது:-
‘சிகிச்சையின் போது ஜெயலலிதாவுடன் சசிகலா மட்டுமே உடன் இருந்தார். வேறு யாரும் அவருடன் இல்லை. அப்பல்லோ மருத்துவர்களும் சிகிச்சையின் போது மட்டுமே அவரது அறைக்குள் சென்று வந்தனர். சசிகலா மட்டுமே ஜெயலலிதாவுடன் பேசி வந்தார்.
உடல்நலம் தொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள் கேட்கும் கேள்விகளை கூட சசிகலா தான் ஜெயலலிதாவிடம் கேட்டு தெரிவித்துள்ளார். சசிகலா மட்டுமே இறுதி வரை ஜெயலலிதாவுடன் மருத்துவமனையில் இருந்தார். அரசு தரப்பில் ஏற்படுத்தப்பட்ட மருத்துவர்கள் குழுவில் இடம்பெற்ற மருத்துவர்களான நான்(மருத்துவர் பாலாஜி) உள்பட 5 மருத்துவர்களுக்கு ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த சிறப்பு வார்டுக்கு அருகே தனியாக அறை ஒதுக்கப்பட்டிருந்தது.
அங்கு டி.வி. கூட இல்லை. சேர், டேபிள் மட்டுமே இருந்தது. ஒவ்வொரு நாளும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழு அளித்த மருத்துவ அறிக்கையை பரிசீலித்து அதுகுறித்த விவரத்தை அரசுக்கு அவ்வப்போது தெரிவித்து வந்தோம்.
நான், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை எதுவும் அளிக்கவில்லை. அப்பல்லோ மருத்துவர்கள், லண்டன் மருத்துவர், எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் உள்பட வெளியில் இருந்து வந்த மருத்துவர்களுக்கு ஒருங்கிணைப்பாளராகவே இருந்து வந்தேன். பல நாட்கள் நீர் ஆகாரத்தையே ஜெயலலிதா உணவாக எடுத்துக்கொண்டார்.
சி.டி. ஸ்கேன் எடுப்பதற்காக ஜெயலலிதா அழைத்து செல்லப்பட்ட போதும் கூட ஸ்டிரெச்சரின் 4 புறமும் திரைசீலை போடப்பட்டு தான் கொண்டு செல்லப்பட்டார். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே உடல்நலம் சரியில்லாமல் தான் இருந்துள்ளார்.
போயஸ்கார்டனில் இருந்தபோது ஏற்பட்ட உடல் நல பாதிப்பு குறித்து அவரது குடும்ப டாக்டரிடம் தான் கேட்க வேண்டும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ந் தேதி வரை ஜெயலலிதா உயிரோடு இருந்ததை பார்த்தேன்.’
இது போன்று பல்வேறு தகவல்களை மருத்துவர் பாலாஜி நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்ததாக கூறப்படுகிறது.
மருத்துவர் பாலாஜி தெரிவித்த தகவல்கள் அடிப்படையில் அரசு தரப்பில் நியமிக்கப்பட்டுள்ள வக்கீல் நிரஞ்சன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
விசாரணையின் போது பல்வேறு ஆவணங்களை மருத்துவர் பாலாஜி ஆணையத்தில் தாக்கல் செய்தார். இதன்பின்பு, கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய வருகிற 27-ந் தேதி மருத்துவர் பாலாஜி ஆணையத்தில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.