டிசம்பர் 31 க்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும்-சுவாமிநாதன்

261 0

டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக கேப்பாப்புலவு காணிகள் விடுவிக்கப்படும் என சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் சபையில் தெரிவித்ததோடு இரணைதீவு விவகாரம் தொடர்பில் படையினருடன் பேச்சுநடத்த வேண்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட தெரிவுக்குழு அறிக்கைகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

போர் முடிவுற்றதைத் தொடர்ந்து 2015 இல் புதிய நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வழிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சுக்கு போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முழுமையான மீள்குடியேற்ற செயற்பாடுகளின் பொறுப்பு கையளிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற செயற்பாடுகளில் சர்வதேச அழுத்தங்கள் மற்றும் கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகள் பிரதான விடயமாக அமைந்திருந்தன.  புதிய அரசு போரினால் பாதிக்கப்ட்ட மக்கள் மீது விசேட கவனத்தைச் செலுத்தியது.  துரித மீள்குடியேற்றத்  திட்டத்திற்காக ரூபா. 14,050 மில்லியன் இவ்வமைச்சின் கீழ் 2016 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்டதுடன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் மற்றும் எல்லைக் கிராமங்களான புத்தளம், அனுராதபுரம் மற்றும் பொலன்நறுவை ஆகிய மாவட்டங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் முகம்கொடுத்து வரும் இடர்களை நீக்கும் நோக்குடன் கடந்த வருடத்தில் பல்வேறு மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தித்திட்டங்கள் எமது அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

2016 ஆம் ஆண்டில்  11,253 வீட்டுகள், 7,598 மலசலகூடங்கள் மற்றும் 1,293 பொதுக் கிணறுகள் என்பன புதிதாக நிர்மாணிக்கப்பட்டன.  மேலும் போரினால் பகுதியளவில் தேசமடைந்த 2,216 வீடுகள்; புதிப்பிக்கப்பட்டன.

இவற்றிற்கு மேலதிகமாக  187 உள்ளுர் வீதிகள், 27 வைத்தியசாலைகள் மற்றும் 66 பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டதுடன் 8,902 நீர் இணைப்புகளும் 2016ஆம் ஆண்டில் வழங்கப்பட்டன.  மேலும் 12,757 குடும்பங்களுக்கு தலா ரூபா. ஒரு லட்சம் (100,000.00) பொறுமதியான உபகரணங்கள் வாழ்வாதார  கருத்திட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில்  வழங்கப்பட்டன.  போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த வருடம் செலுத்தப்பட்ட இவ் எல்லா உதவிகளும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள மாவட்டங்களில் வறுமை மட்டத்தைக் குறைத்துள்ளன.

துரித மீள்குடியேற்ற செயற்திட்டத்திற்காக ரூபா 9,000 மில்லியன் 2017 ஆம் ஆண்டில் எனது அமைச்சிற்கு வழங்கப்பட்டது.  இதன்மூலம்; 5,811 வீடுகள், 2,533 மலசலகூடங்கள் மற்றும் 348 பொது கிணறுகள் என்பன நிர்மாணிக்கப்பட்டு கொண்டிருப்பதுடன் பகுதியளவில் தேசமடைந்த 905 வீடுகள் புனரமைக்கப்பட்டும் வருகின்றது.  இதற்கு மேலதிகமாக 53 உள்ளுர் வீதிகளும் 29 வைத்தியசாலைகள் மற்றும் 264 பாடசாலைக் கட்டடங்கள் புனரமைக்கப்பட்டும் வருவதுடன் 3,313 நீர் இணைப்புகளும் வழங்கப்பட்டு வருகின்றக.  மேலும் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மீன்பிடி, பனைவளப் பயன்பாடு மற்றும் சுயவேலை வாய்ப்புத் தொடர்பில் 7,287 குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான உபகரணங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.  மேலும் 8,975 வீடுகளுக்கான மின்சார இணைப்பு வழங்கப்பட்டு உள்ளதுடன் மானிப்பாய் மற்றும் சங்கானை சந்தைத் தொகுதிகளும் நான்கு அரிசி ஆலைகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

வடமாகாணத்தில் இந்த ஆண்டு 181 சிறுகுளங்கள்; புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன.  கிளிநொச்சியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின்னர் 90 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு அதிநவீன தீயணைப்பு தொகுதியினை வழங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வருகின்றது.  மேலும் ரூபா 80 மில்லியன் கிளிநொச்சி சந்தைத் தொகுதி கட்டுமானத்திற்காக ஒதுக்கப்பட்டது.

போரினால் பாதிக்கப்பட்ட விசேட தேவை உடையோருக்கு உதவுவதற்காக செயற்கை அவயவங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்க இந்த அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.  போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளுக்காக 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள்  மிகத்திறமையாக பயன்படுத்தப்பட்டு உள்ளதுடன் 92 – 95 சதவீதம் வரையான நிதி வினைத் திறனுடன் செலவு செய்யப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மற்றும் வரவு செலவுத்திட்ட உரையில் குறிப்பிட்ட செலவீன கருத்திட்டம் மூலம் ரூபா 4,800 எனது அமைச்சிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  இதில் துரித மீள்குடியேற்ற திட்ட தொடர்ச்சிக்காக 750 மில்லியன்களும் நீண்டகால இடம்பெயர்ந்தோர் குடியேற்றத்திற்காக 750 மில்லியன்களும் ஒதுக்கப்பட்டள்ளது.

துரித மிள்குடியேற்ற கருத்திட்டத்தில், வாழ்வாதார உதவிக்காக 350 மில்லியன்களும், சமுதாயம் சார் நீர் இணைப்புக்கள் வழங்க 100 மில்லியன்களும், சுகாதார வசதிகள் மேம்படுத்த 300 மில்லியன்களும், சிறு கைத்தொழில் நிறுவானங்கள் மற்றும் மாதிரிக்கிராமத்திற்காக 1000 மில்லியன்களும் சமுதாயம் சார் நீர் இணைப்புக்காக 75 மில்லியன்களும் தேசமடைந்த பாடசாலைக் கட்டட புனர்நிர்மாணத்திற்காக 100 மில்லியன்களும் சிறுகுளங்களின் புனரமைப்பிற்காக 200 மில்லியன்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.  அத்துடன் பொது இடங்களின் புனரமைப்பிற்காக 100 மில்லியன்களும் உள்ளக வீதிகளின் புனரமைப்பிற்காக 400 மில்லியன்களும் விசேட திறமையுள்ள பெண்களின் தேவைக்காக 125 மில்லியன்களும் கடன்பட்ட மக்களிற்கான உதவிக்காக 1000 மில்லியன்களும வேதன மானிய கொடுப்பனவுக்காக (முன்னாள் போராளிகள் மற்றும் விதவைகளுக்காக) 250 மில்லியன்களும் இளம்பராய குற்றவாளிகளின் போக்குவரத்து வாகனக் கொள்வனவுகள் 50 மில்லியன்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே 165,000 உள்ளக இடம்பெயர்ந்த  குடும்பங்கள் இணங்காணப்பட்டுள்ளனர். 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டின் அடிப்படையில் 17,000 குடும்பங்களுக்கு மாத்திரம் வீட்டுகள் பயனாளிகளின் பங்களிப்புடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  துரிதப்படுத்த மீள்குடியேற்றத்திட்டத்தில் 65,000 பொருத்து வீட்டுத்திட்டம் 100 சதவீத நிதிப்பங்களிப்புடன் ஆரம்பிக்கப்பட இருந்தது.

இறுதியில் அரசியல் தலையீடு காரணமாக 6,000 பொருத்து வீட்டுத்திட்டத்திற்கே அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது.  எனவே இத்திட்டத்தினை என்னால் எதிர்பார்க்கப்பட்ட முறையில் இவ்வாண்டில் நடைமுறைப்படுத்த முடியாது போயுள்ளது.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வழிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சின் கொள்கைப் பிரமாண அடிப்படையில் புனர்வாழ்வு மீள்குடியேற்ற நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நடைமுறைப்படுத்துவதற்குரிய எல்லா நிதிகளையும் எனது அமைச்சிற்கு ஒதுக்க இந்த பாராளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தது 15,000 மில்லியன் நிதி ஒதுக்கை புனர்வாழ்வு, மீள்குடியேற்றத் திட்டங்களுக்காக  எனது அமைச்சிற்கு ஒதுக்கி துரித மீள்குடியேற்ற திட்டத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அரசாங்கத்தின் இலக்கையும் கற்றக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின்; சிபார்சுகளையும் சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக நடைமுறைப்படுத்த முடியும் என்றார்.

Leave a comment