மலையக விவகாரங்கள் தொடர்பிலான செயற் பாட்டுக்குழுவொன்று பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்த அமைச்சர் மனோகணேசன் அடுத்த இரண்டுவாரங்களில் கூடுகின்றபோது மலையக ஆசிரிய உதவியாளர்கள் நியமனம் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தும் என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு, தேசிய கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழி, நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான விசேட தெரிவுக் குழுக்களின் அறிக்கைகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியான ஸ்ரீதரன் எம்.பி மலையக ஆசிரியர் உதவியாளர்கள் நியமனம் தொடர்பிலான விடயங்களை சபையின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது பதிலளித்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் மனோகணேசன் மேலும் தெரிவிக்கையில்,
மலையக ஆசிரிய உதவியாளர்கள் சம்பந்தமாக நீங்கள் தெரிவித்த கருத்துக்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். உங்களுடைய கவனத்திற்காக நான் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தற்போது மலையக விவாகரங்கள் தொடர்பான செயற்பாட்டுக்குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. அதிலே தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உள்ளடங்குவதோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமை வகிக்கின்றார். அந்தக்குழுவின் முதலாவது கலந்துரையாடல் அடுத்த இரண்டு வாரங்களில் நடைபெறவிருக்கின்றது. அதன்போது மலையக உதவி ஆசிரியர்கள் பிரச்சினையை முதலாவது விடயமாக எடுத்துக்கொள்ளவுள்ளோம் என்றார்.