நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்ட வழக்கில், தமிழக அரசு அளித்த பதில் மனுவுக்கு எதிராக நளினி சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி மற்றும் முருகனை வக்கீல் புகழேந்தி சந்தித்து பேசினார்.
10 ஆண்டுகளுக்குமேல் சிறைத்தண்டனை அனுபவித்த ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்யக்கோரியும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 26 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் நளினி, முருகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரியும் வருகிற 10-ந்தேதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே சிறைக்கைதிகள் உரிமை மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதில், கனிமொழி எம்.பி. உள்பட பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர், திரைப்படத்துறையினர் கலந்து கொள்கின்றனர்.
நளினி தனது மகள் திருமணத்துக்காக பரோல் கேட்ட வழக்கில், அவரை பரோலில் விட்டால் நளினி தப்பிச்சென்று விடுவார் என்று தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு எதிராக நளினி சார்பில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படுகிறது. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதே அரசு இப்போது அவர்களை விடுதலை செய்வது பற்றி கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன்? எனத் தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.