போருக்கு மத்தியிலும் புலிகள் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள்! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

425 0

போருக்கு மத்தியிலும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தன்னிறைவுப் பொருளாதாரத்தை ஏற்படுத்தியிருந்தார்கள் என பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகளை வழங்கிவைத்து பேசும் போது மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரிகாலைநாகபடுவான் மற்றும் வலைப்பாடு பிரதேசங்களைச் சேர்ந்த 19 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவியாக 9.5 லட்சம் ரூபா பெறுமதியான தொழில் முயற்சிகளுக்கான உபகரணங்களை வழங்கிவைத்து அவர் பேசும்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் பேசுகையில்…

விடுதலைப் புலிகளின் காலத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உச்சமாக இருந்தது. நாங்கள் யாரிடமும் கையேந்தியிருக்கவில்லை. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் நிழல் அரசாங்கம் இயங்கிபோது இருந்தவர்களுக்கு இது நன்றாகவே தெரியும். தன்னிறைவுப் பொருளாதாராத்தை நோக்கியதாகவே எமது வளர்ச்சி இருந்தது. இன்று அந்த நிலை மாறி தென்னிலங்கையை நாடி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேசங்களை வளப்படுத்துவதன் மூலமே ஆரோக்கியமான வளர்ச்சியை காணமுடியும். மத்திய அரசைப் பொறுத்தவரை எம்மை காரணம் காட்டி உலகநாடுகளிடம் இருந்து பெரும்தொகை கடன்களை பெற்றுக் கொண்டாலும் அதில் சொற்ப அளவு நிதியையே எமக்கு ஒதுக்குகின்றது. அதனைக் கொண்டே நாம் உதவித்திட்டங்களை செயற்படுத்த வேண்டியுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கரியாலை நாகபட்டுவான் பகுதியைச் சேர்ந்த சிவகுமார்-ஜெயந்தினி மற்றும் ற.சுரேக்கா ஆகியோருக்கு விவசாயம் செய்வதற்கான உபகரணங்களும், கரியாலை நாகபட்டுவான் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம்-கனகம்மா, வலைப்பாடு வேரவில் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின்-அஞ்சிலம்மா, பத்திநாதர்-அன்னமேரி, இரணைமாதா நகரைச் சேர்ந்த ஜேம்ஸ்-அமுதினி, நாச்சிக்குடாவைச் சேர்ந்த தர்சேந்திரன்-சுகிர்தா மற்றும் விஜயரத்தினம்-சுஜிதேவி ஆகியோருக்கு கோழி வளர்ப்பிற்கான உதவிப்பnhருட்களும் வழங்கப்பட்டது.

இவ்வாறு கரியாலை நாகபட்டுவான் பகுதியைச் சேர்ந்த றஜீக்காந்தன்-அஜந்தா, வலைப்பாடு வேரவில் பகுதியைச் சேர்ந்த டிக்சன்மேரி-அனிற்றா, சகாயச்செல்வம்-மரியதிரேசம்மா, தயாபரன்-மேரிரஞ்சினி, கிறிஸ்ரி-அனல்துரெந்திரன் டொறிஸ், ஜெயப்பிரகாஸ்-மரியவிஜிந்தினி, இரணைமாதா நகரைச் சேர்ந்த டோமினிக்-யேசுமரியாள், அலெக்சாண்டர்-அமலநாயகி மற்றும் எட்மன் கனியூஸ்-நிசாந்தினி ஆகியோருக்கு மீன்பிடித் தொழில் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

பூநகரியைச் சேர்ந்த சி.தங்கரத்தினம், வலைப்பாடு வேரவில் பகுதியைச் சேர்ந்த அருள்நேசன்-சிறியபுஸ்பம் ஆகியோருக்கு தையல் இயந்திரங்களும் அமைச்சரால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment