அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்ற வெட்டுப்புள்ளி முறைமையின் மூலம் பல்கலைக்கழக நுழைவு கிடைக்காத மாணவர்களுக்கு பட்டங்களை பெற்றுக் கொடுக்கும் அரச சார்பற்ற உயர் கல்வி நிர்வனங்களில் பட்டப்படிப்பு கற்றைநெறிகளை தொடர்வதற்காக ரூ.800,000 உயரிய கடன் தொகைக்கு உட்பட்டு, வட்டியற்ற சலுகை கடன் வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்றை 2017ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் கீழ் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
அதற்கு சமாந்தரமாக அரச சார்பற்ற உயர் கல்வி நிர்வனங்களில் கல்வியியல் பட்டப்படிப்பினை தொடர்வதற்காக வேண்டி க.பொ.த உயர் தர பரீட்சையில் சித்தியெய்திய இளம் சமூகத்தினரின் அன்றாட செலவுகள் உள்ளடங்கும் வகையில் 1.1 மில்லியன் ரூபா வரை கடன் தொகையினை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
அதனடிப்படையில், ஏனைய கற்கை நெறிகளை தொடரும் மாணவர்களுக்கும் ஏனைய செலவுகளுக்காக வேண்டி வருடாந்தம் 75,000 ரூபா வீதம் மேலதிகமாக வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
அதற்கிணங்க, குறித்த சலுகை கடன் தொகையினை மூன்று வருட பட்டப்படிப்பிற்காக வேண்டி 1,025,000 ரூபா வரையும், நான்கு வருட பட்டப்படிப்பிற்காக வேண்டி 1,100,000 ரூபா வரையும் அதிகரிப்பது தொடர்பில் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.