வடகொரியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஐ.நா. அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன் அந்நாட்டிற்கு சென்றுள்ளார்.
ஐ.நா. மற்றும் பல நாடுகளின் எதிர்ப்பு மற்றும் பொருளாதாரத் தடைகளையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணுஆயுத சோதனைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த வாரம் வடகொரியா மீண்டும் ஒரு கண்டம்விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை சோதனை நடத்தியது. இந்த முறை வடகொரியாவின் ஏவுகணை தென்கொரிய வான் எல்லையில் பறந்து, ஜப்பான் கடற்பகுதியில் விழுந்தது.
இதையடுத்து அமெரிக்காவின் எந்த பகுதியையும் தங்களால் தாக்கமுடியும் என வடகொரியா அறிவித்தது. அதைத்தொடர்ந்து அமெரிக்கா மற்றும் தென்கொரியா விமானப்படையினர் இணைந்து நேற்று முன்தினம் முதல் கூட்டுப்பயிற்சி நடத்தி வருகின்றனர். விஜலண்ட் ஏஸ் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த கூட்டுப்பயிற்சியின் மூலம் இரு விமானப்படையின் செயல்திறன்கள் மேம்படும் என தென்கொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப்பயிற்சியில் சுமார் 230 ராணுவ விமானங்கள் பங்கேற்றுள்ளன. இந்த பயிற்சிக்காக அமெரிக்கா விமானப்படை 24 மறைந்து தாக்கும் விமானங்களை அனுப்பியுள்ளது. இந்த பயிற்சியில் சுமார் 12 ஆயிரம் ராணுவ வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். இது கொரிய தீபகற்பத்தில் மேலும் பதற்றமான சூழ்நிலையை ஏற்படுத்தியது.
பரபரப்பான இந்த சூழலில் ஐநா.வின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மேன், அமைதி தூதரக வடகொரியாவிற்கு சென்றுள்ளார். இதற்காக சீன தலைநகர் பீஜிங்கிற்கு வந்த அவர், அங்கிருந்து வடகொரியாவிற்கு சென்றார்.
அவரது பயணம் குறித்து ஐ.நா. செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் கூறியதாவது:
வடகொரியாவிற்கு சென்றுள்ள பெல்ட்மேன், இருதரப்பு விருப்பங்கள் மற்றும் கவலைகள் குறித்து அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அவர் சந்திப்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை. மேலும் அங்கு வெளிநாட்டு தூதர்கள், ஐ.நா. ஊழியர்கள் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.