விஜய் மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு விசாரணை 7-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

238 0

தொழில் அதிபர் விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கின் விசாரணை வருகிற 7-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார்.

அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு இங்கிலாந்து அரசை மத்திய அரசு கேட்டுக்கொண்டது. அதன்படி அவரை ஸ்காட்லாந்து போலீசார் கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கின் இறுதி விசாரணை தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா லூயிஸ் அர்பத்னோட் முன்னிலையில் நேற்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 14-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கும் என கூறப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்காக விஜய் மல்லையா கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் இங்கிலாந்து அரசின் வழக்கு சேவை மையம் ஆஜரானது.

இன்றைய வழக்கு விசாரணையின் போது மல்லையா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கு அரசியல் கால்புணர்ச்சியால் தொடரப்பட்டுள்ளது எனவும், மல்லையா மோசடி செய்ததற்கான எந்த ஆதரமும் இல்லை எனவும் வாதிட்டார். இந்நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையை வருகிற 7-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு அடுத்த ஆண்டு (2018) ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மல்லையாவை நாடு கடத்துவதற்கு ஆதரவாக தீர்ப்பு அளிக்கப்பட்டால், அவரை நாடு கடத்துவதற்கான உத்தரவை இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஆம்பர் ரட், 2 மாதங்களுக்குள் பிறப்பிக்க வேண்டும்.

எனினும் அதற்கு முன்னதாக இந்த தீர்ப்பை எதிர்த்து வேறு கோர்ட்டுகளில் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a comment