இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினை ‘பேச்சில் தீர்க்கப்படும்

520 0

இந்திய மீனவர்கள் தொடர்பில் இந்தியாவுடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சிக்கும் அதேவேளை, இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழைபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர நாடாளுமன்றில் நேற்று(05) தெரிவித்தார்.

2018 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி, பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி, கடற்றொழில் நீரியல் வளம் ஆகிய அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் உரை நிகழ்த்துகையில்,

இந்திய மீனவர்கள் நம்நாட்டுக் கடல் எல்லைக்குள் நுழைவதால் எமது கடல் வளம் சூறையாடப்படும் அதேவேளை, அவர்கள் பெரும் வருமானத்தையும் ஈட்டிக்கொள்கின்றனர்.

இது தொடர்பில் நாம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். கடந்த ஆட்சிக்காலத்தின் போது, மீனவர்கள் கைது செய்யப்பட்டால் இந்திய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக அவர்களைப் படகுகளுடன் கையளிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால் இப்போது நாம் படகுகளைக் கையளிப்பதில்லை என்ற தீர்மானத்துக்கு வந்திருக்கிறோம்.

ஆதலால் இலங்கைக் கடல் எல்லைக்குள் நுழையும் மீனவர்களின் எண்ணிக்கை 50 வீதத்தால் குறைவடைந்துள்ளது. அது தவிர நாடாளுமன்ற சட்டமூலம் ஒன்றின் ஊடாக, தண்டப்பணம் அறவிடுவதற்கும் நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இந்திய மீனவர்கள் விவகாரத்தில் இந்திய அரசாங்கத்துடன் சுமுகமான முறையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கே நாம் எப்போதும் முயற்சித்து வருகிறோம். டில்லியில் இது குறித்துப் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். இந்தப் பேச்சுவார்த்தைகளின் பிரகாரம், புதிதாக மீன்பிடிப்படகுகளை உபயோகிப்பதற்கான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில்லை என இந்திய அரசாங்கம் தீர்மானித்தது. அது மாத்திரமன்றி புதியதாக துறைமுகங்களை அமைத்து, கடல்சார்ந்த ஏனைய தொழிற்துறையில் மீனவர்களை ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது எமக்குக் கிடைத்த பாரிய வெற்றியாகும்.

மீன்பிடி தொடர்பில் வடக்குப் பகுதியில் பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம். வடக்கில் பிடிக்கப்படும் மீன்களில் 40 வீதமானவை நேரடி நுகர்வுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. ஆதலால் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் அந்தத் திட்டத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தவுள்ளோம் எனத் தெரிவித்தார்.

Leave a comment