கடற்படையினர் கைது செய்த 25 மீனவர்கள் விடுதலை!

327 0

மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று  காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில், குறித்த மீனவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிமன்றில் ஆஜராகிய போது குறித்த மீனவர்களை மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா விடுதலை செய்தார். 

மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று  காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயண்படுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுபாட்டு மீனவர்களில் 5 படகுகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து நேற்று கைது செய்து தாழ்வுபாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மீனவர்கள் கைது செய்யப்பட்டதினை அறிந்து கொண்ட தாழ்வுபாட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாழ்வுபாட்டு கடற்படை முகாமை நோக்கி சென்று  மீனவர்களின் கைது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.

இந் நிலையில் அங்கு வந்த பொலிஸார் குறித்த மீனவர்களை நேற்று  மாலை பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்ததோடு, இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

இந் நிலையில் குறித்த 25 மீனவர்களும் இன்று காலை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதன் போது குறித்த 25 மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான அனுமதி பத்திரத்தை தம் வசம் வைத்திருக்காததன் காரணத்தினாலேயே அவர்கள் கைது செய்யப்படுள்ளதாக கடற்படையினர் மன்றில் தெரிவித்திருந்தனர்.

விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் எவ்வித நிபந்தனைகளும் இன்றி குறித்த மீனவர்கள் 25 பேரையும் விடுதலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment