காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபயணம் மேற்கொண்டு இந்திய கலாச்சாரத்தை ஆவணப்படுத்தும் இங்கிலாந்து இளைஞர்

476 0

இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த கலாச்சாரம், பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறைகள், இயற்கை அழகு உள்ளிட்டவற்றை ஆவணப்படுத்தும் வகையில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரையில் இங்கிலாந்து இளைஞர் ஒலீ ஹன்டர் ஸ்மார்ட் (34) நடைபயணம் மேற்கொண்டுள்ளார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றையும், சுலோச்சனா முதலியார் பாலத்தையும் நேற்று அவர் விடியோ காட்சிகளாக பதிவு செய்தார்.

இங்கிலாந்தில் லண்டன் நகரை சேர்ந்தவர் ஹன்டர் ஸ்மார்ட். மார்க்கெட்டிங் தொழிலில் ஈடுபட்டுவந்த இவர், கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியிலிருந்து தனது பயணத்தை தொடங்கினார்.

வழிநெடுக இந்திய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாற்று சிறப்பு மிக்க நினைவிடங்கள், இயற்கை அழகு உள்ளிட்டவற்றை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து வந்தார். பல்வேறு நகரங்கள் வழியாக பயணம் செய்த அவர், திருநெல்வேலிக்கு நேற்று வந்தார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றையும், சுலோச்சனா முதலியார் பாலத்தையும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வெளிப்புற பகுதியில் உள்ள அன்புச் சுவர் உள்ளிட்டவற்றை அவர் வீடியோ பதிவு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இங்குள்ள மக்களின் கலாச்சாரத்தை அறிய நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். மக்கள் குறு நிலங்களிலும் விவசாயம் செய்து தங்கள் தேவைகளை பூர்த்தி செய்வது ஆச்சரியமாக உள்ளது.

இங்கிலாந்தில் பெரிய பண்ணைகளில் விவசாய பணிகள் நடைபெறுகின்றன. லண்டன் தேம்ஸ் நதி மீதுள்ள பாலத்தை போன்றே தாமிரபரணி ஆற்றுப்பாலமும் கட்டப்பட்டிருக்கிறது.

எனது பயணத்தில் நான் பதிவு செய்த காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடவும், இது தொடர்பாக விரிவான நாவல் எழுதவும் திட்டமிட்டுள்ளேன் என்றார் அவர்.

Leave a comment