சென்னையில் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி இன்று முதல்வர், அமைச்சர்கள் நடத்திய பேரணி, டிடிவி தினகரன் அணியினர் நடத்திய பேரணி காரணமாக சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பேருந்துகள் திருப்பி விடப்பட்டதால் பள்ளிக் குழந்தைகள் சாலையில் இறக்கிவிடப்பட்டு நடந்தே பள்ளிக்கு சென்றனர்.
ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று அதிமுக மற்றும் தினகரன் அணியினரால் அனுசரிக்கப்பட்டது. அண்ணா சாலையிலிருந்து அமைதிப்பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் கலந்துக்கொள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து தொண்டர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்ததால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலையில் சென்னை அண்ணா சாலையில் பள்ளிக்கு, வேலைக்கு செல்லும் மாணவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பேருந்துகள் எங்கேயும் நகர முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தன. போக்குவரத்து நெரிசலின் தொடர்ச்சி அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியதால் சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளிக்குச் செல்லும் மாணவ மாணவிகள் பேருந்து செல்ல வழி இல்லாததால் வழியிலேயே இறக்கி விடப்பட்டனர். இதனால் புத்தக மூட்டைகளுடன் பள்ளிக்கும் செல்ல முடியாமல், வீட்டுக்கும் திரும்ப முடியாமல் பள்ளிக் குழந்தைகள் நடுவழியில் நிற்பதைக் காண முடிந்தது.
ஏற்கெனவே மழை பாதிப்பால் பள்ளிக்கு செல்ல முடியாமல் போன வாரம் அவதிப்பட்டோம், இன்று போக்குவரத்து நெரிசல் காரணமாக அவதிப்படுகிறோம், அரசாங்கமே போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக இருந்தால் பள்ளிக்குப் போகும் பிள்ளைகளை வைத்துக்கொண்டு நாங்க எங்கே அலைவது என்று முணுமுணுப்புடன் பெற்றோர்கள் புலம்பியபடி சென்றனர்.
ஜெயலலிதா நினைவு நாளில் இத்தனை பெரிய போக்குவரத்து நெரிசல் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் ஜெயலலிதா தன்னால் எந்த நாளும் போக்குவரத்தில் பொதுமக்கள் சிக்கக் கூடாது என்று நினைப்பார். அதிகாரிகளை கடிந்துகொள்வார். பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக திறப்பு விழாக்களை எளிதாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நடத்தி திறந்து வைத்தவர், ஆனால் அவர் நினைவு நாளில் அவர் பெயரால் பொதுமக்களுக்கு பாதிப்பு, இதற்கு பள்ளிகளுக்கு விடுமுறை விட்டிருக்கலாம் என்று ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் விமர்சனம் செய்தார்.
போகுவரத்து நெரிசலில் சிக்கிய அனைத்து பொதுமக்களின் விமர்சனமும் இதே ரீதியில் இருந்தது. மதியம் 1 மணிக்குப் பிறகு போக்குவரத்து சீரானது.