யாழ். மேல் நீதிமன்றுக்கு அழைத்து வந்த இருவர் சிறைக்காவலர்களின் பிடியிலிருந்து தப்பிப்பு
வவுனியாவில் இன்று அதிகாலை சம்பவம் !2 மணி நேரத் தேடுதலின் பின் கைதாகினர்
வவுனியா சிறைச்சாலையிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்ட மூன்று சந்தேகநபர்களில் இருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பிடியிலிருந்து இன்று அதிகாலை 4 மணியளவில் தப்பித்தனர்.
எனினும் 2 மணிநேர தேடுதலின் பின்னர் அவர்கள் இருவரையும் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மீளவும் பிடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற சான்றுப் பொருள்கள் அறையை உடைத்து கஞ்சா திருடிய குற்றச்சாட்டில் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மூவரே இவ்வாறு தப்பித்தனர்.
நீதிமன்றப் பாதுகாப்பில் இருந்த சான்றுப்பொருளான ரூபா 27 இலட்சம் பெறுமதியான கஞ்சா போதைப்பொருள் கடந்த ஆண்டு திருடப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மூவர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து சான்றுப்பொருளான கஞ்சாவும் மீட்கப்பட்டது.
சந்தேகநபர்கள் மூவரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவருக்கும் எதிராக திருட்டுக் குற்றச்சாட்டுகளை முன்வைத்து யாழ்ப்மாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கு விசாரணைக்கு இன்று திகதியிடப்பட்டது. அதனால் சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று அதிகாலை 4 மணிக்குப் புறப்படத் தயாராகியுள்ளனர்.
சந்தேகநபர்கள் மூவரையும் சிறைச்சாலை வாகனத்தில் ஏற்ற முற்பட்ட போது இருவர் தப்பித்தனர்.
2 மணிநேர தேடுதலின் பின்னர் வவுனியா நகர்ப்பகுதியில் மறைந்திருந்த போது
அவர்கள் இருவரும் மீளவும் பிடிக்கப்பட்டனர் என சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆயுதம் தாங்கிய சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் சந்தேகநபர்கள் மேல் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
வழக்கு விசாரணைக்கு வந்தது. சந்தேகநபர் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டனர்.
இந்த நிலையில் மூவருக்கும் எதிரான ததண்டனைத் தீர்ப்பு வரும் ஜனவரி 7ஆம் திகதி வழங்கப்படும் என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் அறிவித்தார். அதுவரை சந்தேகநபர்களின் விளக்கமறியல் மன்றினால் நீடிக்கப்பட்டது.