அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பில் எதிர்வரும் 7 ஆம் திகதி வியாழக்கிழமை அவசர அமைச்சரவை கூட்டமொன்று நடத்துவதென கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் குறித்த விசேட அமைச்சரவை கூட்டத்தினை
அடுத்து தேவையேற்படின் விசேட பாராளுமன்ற விவாதமொன்றை மறுநாள் 8ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கும் குறித்த கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை முற்பகல் 11மணிக்கு நடைபெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தின்போதே மேற்கண்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிப்பது தொடர்பில் மூலோபாய அபிவிருத்தி சட்ட மூலத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைய சம்பந்தப்பட்ட கோரிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
ஆகவே எதிர்வரும் 7 ஆம் திகதி அவசர அமைச்சரவை கூட்ட மொன்றுக்கு அழைப்பு விடுத்து அமைச்சரவை அனுமதியைபெற்ற பின்னர் 7 ஆம் திகதியே சம்பந்தப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் குறித்த விடயம் சம்பந்தமாக விவாதமொன்று அவசியமெனில் எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு 7:30 மணி முதல்; 9:30 மணி வரை அந்த விவாதத்தை நடத்த வேண்டும் என்பதாகும்.