10 ஆவது சர்வதேச விமானப் போக்குவரத்து மாநாடு ‘அனைவருக்கும் ஆபத்தற்ற ஆகாயம்” என்ற தொனிப்பொருளுக்கு அமைய நேற்று பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் ஆரம்பமானது. எதிர்வரும் 8ஆம் திகதி வரை இந்த மாநாடு இடம்பெறவுள்ளது.
சர்வதேச நாடுகளுக்கிடையில் சிவில் விமானப்போக்குவரத்து சேவையினைப் பலப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையினை நாடுகளுக்கிடையில் வலுவூட்டுவதுமே இம்மாநாட்டின் கருப்பொருளாகக் காணப்படுகின்றது. 78 நாடுகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் 500 பிரதிநிதிகள் இம் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையில் இம்மாநாடு இடம்பெறுகின்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, அரச தொழில் முயற்சி அமைச்சர் கபீர் ஹாசிம், விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ஜி.எஸ்.விதானகே,இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபையின் தலைவர் ஆனந்த விமலசேன மற்றும் சிவில் விமான சேவை நிறைவேற்று பணிப்பாளர் உட்பட பிரதான நிறைவேற்று அதிகாரி எச்.எம்.சி. நிமல்சிறி போன்ற முக்கிய பிரமுகர்கள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னர் இம்மாநாடு தென்னாசிய நாடுகளுக்கிடையில் இடம்பெற்றது. 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் மும்பை நகரில் தாஜ்நட்சத்திர ஹோட்டலில் நடைபெற் றமை குறிப்பிடத்தக்கது.