சிரியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 27 பேர் பலி

457 0

சிரியா ஹமோரியா நகரில் உள்ள சந்தை பகுதி மற்றும் குடியிருப்பு பகுதி மீது குண்டு வீசப்பட்டதில் அப்பாவி மக்கள் 17 பேர் கொல்லப்பட்டனர்.

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய உள்நாட்டு போர் 6 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. மற்றொருபுறம் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கமும் இருந்து வருகிறது. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படைகள் சிரியாவில் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

அதேபோல் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படையுடன் இணைந்து ரஷியா வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

தலைநகர் டமாஸ்கசை சுற்றி உள்ள ஹமோரியா, அர்பின், மிஸ்பரா, ஹரஸ்தா உள்ளிட்ட சில நகரங்கள் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றை தங்கள் வசம் கொண்டு வர சிரியா ராணுவப்படை கடுமையாக போராடி வருகிறது. இதற்கு ரஷிய படை உறுதுணையாக உள்ளது.

இந்த நிலையில், அந்த நகரங்களில் நேற்று முன்தினம் அரசு படை மற்றும் ரஷிய படை இணைந்து போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன. 24 மணி நேரத்தில் சுமார் 30 முறை வான்தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் மக்கள் கூட்டம் நிறைந்த பகுதிகளை குறிவைத்து இந்த வான்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டி உள்ளன.

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் “ஹமோரியா நகரில் உள்ள சந்தை பகுதி மற்றும் குடியிருப்பு பகுதி மீது குண்டு வீசப்பட்டதில் அப்பாவி மக்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் அர்பின் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேரும், மிஸ்பரா மற்றும் ஹரஸ்தா நகரங்களில் 6 பேரும் பலியாகினர்” என கூறப்பட்டு உள்ளது.

Leave a comment