ஏமன்: முன்னாள் அதிபரின் மாளிகையை தரைமட்டமாக்கிய ஹவுத்தி போராளிகள்

267 0

ஏமன் நாட்டின் முன்னாள் அதிபரின் மாளிகையை தாக்கி தரைமட்டமாக்கிய ஹவுத்தி போராளிகள் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவை கொன்று விட்டதாகவும் அறிவித்துள்ளனர்.

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஈரானின் ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனாபகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக அரசுப் படைகளுடன் ஹவுத்தி புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அரசுப் படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஹவுத்தி புரட்சிப் படையினரை விமான தாக்குதல் மூலமாக வேட்டையாடும் பணியில் சவுதி தலைமையிலான ஐக்கிய அரபு அமீரக கூட்டுப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2015-ம் ஆண்டில் தொடங்கிய இந்த உள்நாட்டுப் போரில் 8,670-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். சுமார் பத்தாயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் கடந்த மாதம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியது.

கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதியில் இருந்து காலரா நோயால் 2200-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஹவுத்தி படைகளுக்கு எதிராக ஏமன் நாட்டு தலைநகரான சனா நகரில் தற்போது உச்சகட்டப் போர் நடைபெற்று வருகிறது. இங்குள்ள புகழ்பெற்ற மசூதியை மீட்பதற்காக இருதரப்பினருக்கும் இடையில் நிகழ்ந்துவரும் மோதலில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 125-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் வரையில், முன்னாள் அதிபர் அப்துல்லா சலேஹ்வின் கூட்டாளியாக இருந்த ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள்,  ஆட்சிக்கவிழ்ப்பு செய்கிறார் என அவர்மீது தற்போது குற்றம்சாட்டி வருகின்றனர். தலைநகர் சனாவில், சலேஹ் படையினருக்கும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு இடையிலான சண்டை தொடர்ந்து வரும் நிலையில் அவர்களை எதிர்த்து போரிட்டுவரும் சவுதி தலைமையிலான ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை தயாராக இருப்பதாக அலி அப்துல்லா சாலே சமீபத்தில் அறிவித்தார்.

இந்நிலையில், ஏமன் முன்னாள் அதிபர் அலி அப்துல்லா சாலேவின் மாளிகையை இன்று ஹவுத்தி போராளிகள் தகர்த்து தரைமட்டமாக்கியதாகவும், இந்த தாக்குதலில் அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்டதாகவும் ஹவுத்தி போராளிகளுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது காரை வழிமறித்த போராளிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் கொல்லப்பட்ட அலி அப்துல்லா சாலேவின் உடலை ஒரு போர்வையில் கிடத்தி வாகனத்தில் ஏற்றும் காட்சிகளும் அந்நாட்டு தொலைக்காட்சிகளில் திரும்பத்திரும்ப காட்டப்படுகிறது.

எனினும், அலி அப்துல்லா சாலே கொல்லப்பட்டதாக வரும் தகவல் தொடர்பாக அரசு தரப்பில் இன்னும் உரிய விளக்கம் அளிக்கப்படாததால் இது வதந்தியாக இருக்கலாம் அலி அப்துல்லா சாலேவின் தீவிர ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

Leave a comment