மணல் குவாரி தடைக்கு எதிரான அப்பீல் மனுவை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆற்று மணல் குவாரிகளையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை அமர்வு அளித்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. இந்த நடவடிக்கை தமிழகத்தின் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாததையே காட்டுகிறது. இது கண்டிக்கத்தக்கது ஆகும்.
ஆற்று மணல் குவாரிகளை மூட வேண்டும் என்று கடந்த நவம்பர் 29-ஆம் தேதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி மகாதேவன் அளித்தத் தீர்ப்பு தமிழக நலன் கருதி அளிக்கப்பட்டத் தீர்ப்பாகும். உண்மையில் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டதற்காக தமிழக அரசு தான் முதலில் மகிழ்ச்சி அடைந்திருக்க வேண்டும்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு ஒரே ஒரு காரணம் கூட இல்லாத நிலையில், நெல்லை,குமரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அரசு மேல்முறையீடு செய்திருப்பதன் நோக்கம் புரியவில்லை. இதன் பின்னணியில் ஏதோ பேரம் நடந்திருப்பதை மட்டும் யூகிக்க முடிகிறது.
உண்மையில், மணல் குவாரிகள் பற்றி பினாமி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எதையெல்லாம் கூறினாரோ, அதையே தான் உயர்நீதிமன்றமும் கூறியிருக்கிறது. ஆறுகளில் மணல் அள்ளப்படுவதால் சுற்றுச்சூழலும், நிலத்தடி நீர் மட்டமும் பாதிக்கப்படுவதாகவும், அதற்குப் பதிலாக எம்-சாண்ட் எனப்படும் உற்பத்தி மணலை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறித்தான் மணல் குவாரிகளுக்கு நீதிபதி தடை விதித்தார்.
மதுரையில் கடந்த மே மாதம் நடந்த அரசு விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமியும், ‘‘மணல் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதே நிலை நீடித்தால் எதிர் காலத்தில் ஆற்றுப்படுகைகளில் மணலே இல்லாமல் போய் விடும். மணல் இருந்தால் தான் நிலத்தடி நீரை சேமிக்க முடியும். எனவே அடுத்த மூன்றாண்டுகளில் ஆறுகளில் மணல் எடுப்பது படிப்படியாக நிறுத்தப்படும். இதற்கு மாற்றாக செயற்கை மணலை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
அரசின் கருத்தும், நீதி மன்றத்தின் கருத்தும் ஒன்றாக இருக்கும் போது மணல் குவாரிகளை மூட வேண்டும் என உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து அரசு ஏன் மேல்முறையீடு செய்ய வேண்டும்? அதிலும் குறிப்பாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட ஆட்சியர்கள் ஒக்கி புயல் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவே நேரமின்றி தவித்துக் கொண்டிருக்கும் போது இவ்வளவு அவசரமாக மேல்முறையீடு செய்யும் சிந்தனை கூட அவர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆட்சியாளர்கள் சார்பில் அளிக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாகவே அவர்கள் பெயரில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
புயல் நிவாரணப் பணிகள் முடிவடையாத நிலையிலும் அவசர, அவசரமாக மேல்முறையீடு செய்யுமாறு அரசு அழுத்தம் கொடுத்ததற்கு என்ன காரணம்? நிச்சயமாக மணல் தட்டுப்பாடு காரணமாக இருக்க முடியாது. தமிழகத்தில் தற்போது நிலவும் மணல் தட்டுப்பாடுக்கு நீதிமன்றத் தீர்ப்புக் காரணம் இல்லை என்பது ஒருபுறமிருக்க, தமிழக அரசு நினைத்தால் ஒரு மாதத்தில் மணல் தட்டுப்பாட்டைப் போக்கிவிட முடியும்.
தமிழகத்தில் தேவையான அளவுக்கு உற்பத்தி மணல் ஆலைகளை அமைக்கவும், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தரமான ஆற்று மணலை இறக்குமதி செய்யவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதை செய்வதன் மூலம் இப்போது கிடைப்பதை விட குறைவான விலையில் தரமான மணல் கிடைக்கும். அதனால் இது ஒரு பிரச்சினை இல்லை. அப்படியானால் வேறு என்ன காரணம்?
மணல் கொள்ளையும், அதனால் ஆளுங்கட்சியினருக்கு கிடைக்கும் வருமானமும் தடைப்பட்டு விடுமே என்ற கவலை தான் காரணமாக இருக்க முடியும். ஏனெனில் அரசு நிர்ணயித்த விலைப்படி ரூ.1600 மதிப்புள்ள ஒரு சரக்குந்து மணலை வெளிச்சந்தையில் ரூ.30,000 முதல் ரூ.36,000 வரை விலைவைத்து மணல் கொள்ளையர் விற்கின்றனர்.
இவ்வகையில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வரையிலும், கடந்த 15 ஆண்டுகளில் ரூ.4.50 லட்சம் கோடி அளவுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இந்த பணம் முழுவதும் ஆட்சியாளர்களிடமும், மணல் கொள்ளையர்களிடமும் தான் சென்றடைகிறது. இரு திராவிடக் கட்சிகளின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகவும், தேர்தலில் வாக்குக்கான விலையாகவும் திகழ்வது இந்த பணம் தான். இதை இழக்க மனமில்லாமல் தான் மணல் குவாரிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஆட்சியாளர்கள் அவசர, அவசரமாக மேல் முறையீடு செய்துள்ளனர். இது தான் உண்மை.
ஆறுகளில் விதிகளை மீறி மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீர் வளத்திற்கும் இழைக்கப்பட்டுள்ள தீமைகள் அளவிட முடியாதவை. தனிமனிதர்கள், ஊழல்வாதிகள், மணல் கொள்ளையர்கள் ஆகியோரின் நலனைவிட தமிழகத்தின் நலன் தான் மிகவும் முக்கியமானதாகும். எனவே, மணல் குவாரிகளை மூடப் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து செய்யப்பட்டுள்ள முறையீட்டை தமிழக அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
மணல் குவாரிகளை மூடி, இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக சட்டப் போராட்டமும், அரசியல் நகர்வுகளையும் மேற்கொண்டு வரும் பாட்டாளி மக்கள் கட்சி இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் மூலம் ஆற்று மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக முடிவுரை எழுத சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்.இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.