விஷால் போட்டியால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை: மு.க.ஸ்டாலின்

273 0

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடுவதால் புதிய விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது.

அவர் இந்த தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரது வருகை அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்களில் யாராவது ஒருவருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஆனால் விஷால் போட்டியிடுவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். இரட்டை இலை சின்னம் வெற்றியைத் தேடி தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதுபோல தி.மு.க.வினரும் விஷால் போட்டியிடுவது தங்களை பாதிக்காது என்று கூறி வருகிறார்கள்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

வாக்களிக்கும் உரிமை உள்ள யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிட முடியும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவது பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. அவரால் தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை.

தி.மு.க.வைப் பொறுத்த வரை நாங்கள் வெற்றியை நோக்கி முன்னேறி கொண்டிருக்கிறோம். ஆர்.கே.நகரில் தி.மு.க. மிக எளிதான வெற்றியைப் பெறும்.

பா.ஜ.க.வுக்கு அடிமை போல செயல்படும் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றியே தீர வேண்டும் என்பதில் ம.தி.மு.க. உள்பட அனைத்து கட்சிகளும் தீவிரமாக உள்ளன. அ.தி.மு.க. அரசு அனைத்து வகைகளிலும் தோல்வியைத் தழுவி உள்ளது.

அந்த ஆட்சியை அகற்றுவதற்காக போராடி களைத்து விட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் இன்று தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளன.இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

Leave a comment