எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். தலைமையில் மவுன பேரணி!

257 0

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில் முதல்வர், துணை- முதல்வர் ஆகியோர் மவுன ஊர்வலமாக வந்து மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்.- அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அ.தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது.

அண்ணா சிலையில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜாரோடு, விருந்தினர் மாளிகை வழியாக சென்று மெரினா கடற்கரையை அடைந்தது.

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரப்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கறுப்பு சட்டை அணிந்து நினைவு நாளில் பங்கேற்றனர்.

அண்ணாசாலை முதல் எழிலகம் வரையிலும் கடற்கரை சாலை பகுதி முழுவதும் அ.தி.மு.க.வினர் குவிந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வினர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் டி.டி.வி.தினகரன் அணியினரும் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

Leave a comment