மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வி: மத்திய அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

285 0

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் தமிழக அரசு தோல்வியடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

ஒக்கி புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நேரில் பார்வையிட்டும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து உரையாடியப் பிறகும், காணாமல் போயிருக்கும் மீனவர்கள் பிரச்சனை மிக தீவிரமானதாகவும், உணர்வுபூர்வமானதாகவும் இருக்கிறது என்பதையும், மாநில அரசின் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மீது மக்களுக்கு கடும் அதிருப்தியும் ஏமாற்றுமும் ஏற்பட்டுள்ளது என்பதையும் தங்களது கவனத்துக்கு கொண்டுவர இக்கடிதத்தை எழுதுகிறேன்.

காணாமல் போயுள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை கையாளும் திறனை மாநில அரசு இழந்து விட்டது என்பது மீனவ மக்களிடம் நான் மேற்கொண்ட முதற்கட்ட உரையாடல்களிலேயே தெரிந்துவிட்டது. மீனவர்கள் காணாமல் போயுள்ள விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சர், முதல்- அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் சார்பில் வெளியாகும் முரண்பட்ட, தவறான, மாறுபாடான தகவல்கள் அடங்கிய அறிக்கைகளும் பேட்டிகளும் இந்த அரசின் நிர்வாகத் தோல்வியை எடுத்துக்காட்டும் வாக்கு மூலமாக அமைந்திருக்கிறது.

இந்த மிக மோசமான புயலில் இருந்து மக்களை காக்க வேண்டிய மாநில அரசு தன் அடிப்படை கடமையில் இருந்து தவறிவிட்டது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. புயல் குறித்து, வானிலை ஆய்வு மையம் முன் கூட்டியே எச்சரிக்கை விடுத்திருந்தும், மக்களையும், மீனவர்களையும் காப்பாற்றவும், அவர்களின் உடமைகளைப் பாதுகாக்கவும் உரிய நடவடிக்கைகளை சரியான நேரத்தில் எடுக்க இந்த திறனற்ற, பெரும்பான்மை இழந்த, சட்டவிரோத மாநில அரசு தோல்வியடைந்து விட்டது. காணாமல் போயுள்ள மீனவர்கள் குறித்த துல்லியமான, தெளிவான விவரங்கள் ஏதும் இந்த மாநில அரசிடம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

“காணாமல் போன மீனவர்கள் எத்தனை பேர்?” என்பது குறித்து மாநில அமைச்சரவைக்குள்ளேயே இவ்வளவு குழப்பங்கள் நீடிக்கும்போது, “ஆயிரம் மீனவர்கள் காணமல் போயுள்ளார்கள் என்ற தகவல் முற்றிலும் தவறானது”, என்ற தங்களின் பேட்டியை தொலைக்காட்சிகளில் கண்டு அதிர்ச்சியடைந்தேன். எத்தனை மீனவர்கள் கடலுக்குச் சென்றனர், எத்தனை மீனவர்கள் கரைக்கு திரும்பினர், இன்னும் காணாமல் போயுள்ளவர்கள் எத்தனை பேர் அல்லது நடுக்கடலில் தத்தளிப்பவர்கள் எத்தனை பேர் என்ற இந்த எண்ணிக்கை, களநிலவரம் பற்றி நேரடியாக அறிந்துள்ள மீனவச் சமுதாயத்தினர் கூறியது என்பதை தங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

காணாமல் போயிருக்கும் தங்கள் குடும்பத் தலைவர்களை, சொந்தங்களை காண தவித்துக் கொண்டிருக்கும் மீனவச் சமுதாய மக்கள், தங்கள் பேட்டி, ‘‘வெந்தப் புண்ணில் வேல் பாய்ச்சும்” விதத்தில் அமைந்து விட்டதாக கருதுகின்றனர்.

மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்து விட்ட இந்த புயல் கன்னியாகுமரி மாவட்டத்தை தாக்கி சேதப்படுத்தி ஆறு நாட்களாகியும், மத்திய-மாநில அரசுகள் “காணமல்போன மீனவர்களின் எண்ணிக்கையை” இதுவரை தோராயமாகவே வெளியிட்டு வருகின்றனவே தவிர, முதல்- அமைச்சர் ஆய்வுக் கூட்டங்களை நடத்திய பிறகும் காணாமல் போனவர்கள் குறித்த உண்மையான அல்லது நம்பக்கூடிய தகவல்கள் வெளிவரவில்லை என்பது பெருத்த ஏமாற்றமளிக்கிறது.

“1000 மீனவர்களுக்கு மேல் காணவில்லை” என்ற மீனவச் சமுதாய தாய்மார்கள் கண்ணீரும் கம்பலையுமாக கதறுவதை புறக்கணித்துவிட முடியாது. பாதுகாப்புத் துறை அமைச்சர் என்ற முறையில் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடித்து, அவர்களின் உயிரை காப்பாற்றும் அனைத்து வாய்ப்புகளும் தங்களுக்கு இருக்கிறது என்பதை நான் அறிவேன். மேலும், நமது கடற்படைக்கும் காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்கும் அனைத்து பயனுள்ள வழிமுறைகளும் இருக்கிறது என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

இந்த விவகாரத்தில் மேலும் தாமதித்தால், ஏற்கனவே இன்னல் சூழ்ந்துள்ள மீனவச் சமுதாயத்தினரின் துயரத்தை இன்னும் அதிகரிக்கும் என்பதால், காணாமல் போன மீனவர்களின் விவகாரத்தில் அடங்கியுள்ள மனிதாபிமானத்தை கருத்தில் கொண்டு தாங்கள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

இறுதியாக, கன்னியாகுமரியில் ஏற்பட்டுள்ள ஒக்கி புயல் பாதிப்பினை, ‘தேசிய பேரிடராக’ மத்திய அரசு அறிவிக்க தாங்கள் முயற்சிக்க வேண்டுமெனவும், தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி புயலால் சிதைக்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க கன்னியாகுமரி மாவட்டத்தின் முகத்தை மறுசீரமைக்கவும், பேரழிவுக்குள்ளாகியுள்ள உட் கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியை மாநில அரசுக்கு பெற்றுத் தந்திட தாங்கள் உரிய உதவிகளை செய்ய வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment