உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஆசனப்பங்கீடு தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடவுள்ளது. குறித்த கூட்டமானது யாழ்ப்பாணம் மாட்டீன் வீதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமையகத்தில் பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சி, புளொட், ரெலோ ஆகிய கட்சிகள் நேற்று முன்தினம் பிற்பகல் மூன்று மணி முதல் இரவு எட்டு மணி வரையில் ஆசனப்பங்கீடு தொடர்பில் விரிவான கலந்துரையாடல்களை செய்திருந்தன.
குறித்த கலந்துரையாடலில் 80 சதவீதமான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலை பூர்த்தி செய்வதற்கான இறுதி தீர்மானம் எடுப்பதற்கான சந்திப்பாகவே இன்று நடைபெறும் சந்திப்பு அமையவுள்ளது.
இதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கு ஜனநாயக போராளிகள் அமைப்பும் முன்வந்திருந்தது. இதற்கான பச்சைக்கொடி இலங்கை தமிழரசுக் கட்சியினால் காட்டப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது ஜனநாயக போராளிகள் அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதும் வவுனியாவில் இடம்பெற்றிருந்த சந்திப்பின்போது ஜனநாயக போராளிகள் கட்சி தொடபில் காணப்பட்ட சந்தேகங்களின் காரணமாக கூட்டமைப்பின் தலைமை உள்ளிட்டவர்கள் அத்தரப்பினை இணைத்துக்கொள்வதற்கு விரும்பியிருக்கவில்லை.
இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகள் மற்றும் கலந்துரையாடல்களின் அடிப்படையில் அவ்வமைப்பு தற்போது கூட்டமைப்பினுள் உள்வாங்குவதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனநாயகப் போராளிகன் அமைப்பானது தமது அமைப்பு சார்பில் உள்ளுராட்சி மன்றங்களில் களமிறங்குவதற்கு எதிர்ப்பார்த்துள்ள வட்டாரங்கள் தொடர்பிலான பட்டியலொன்றை தமிழரசுக்கட்சியின் தலைமையிடத்தில் கையளித்திருப்பதாகவும் அறிய முடிகின்றது.
இதேவேளை சுகு.ஸ்ரீதரன் தலைமையில் செயற்பட்டு வந்த ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா அணி என நன்கறியப்பட்ட தமிழர் சமூக ஜனநாயக கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏறக்குறைய நிறைவுக்கு வந்துள்ளன. எவ்வாறாயினும் தமிழர் சமூக ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தரும் வடகிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சருமான வரதராஜப்பெருமாள் நாடு திரும்பியுள்ள நிலையில் அக்கட்சி தமிழ் கூட்டமைப்புடன் இணைந்து எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து இறுதிமுடிவுகள் அடுத்த சில நாட்களில் எடுக்கவுள்ளதோடு அதுகுறித்து தீர்க்கமான முடிவுகள் விரைவில் வெளியாகும் என தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.